திருப்பூர்: பள்ளிக் கட்டடங்களுக்கு என தனி விதிகள் வகுக்கப்பட்டுள்ள போதும் திருப்பூர் பகுதியில் பெரும்பாலான நர்சரி, பிரைமரிப் பள்ளிகள் விதிமுறைகளை மீறி பனியன் குடோன்களிலும், நெரிசல் மிக்க தெருக்களிலும் இயங்கி வருகின்றன.
பொதுக் கட்டட விதிகள் சட்டம் 1973-ன்படி பள்ளிக் கட்டடங்களுக்கு தனியாக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூட நுழைவாயில் 2 மீட்டர் அகலத்திலும், 20க்கு 20 அடியுடன் கூடிய ஒவ்வொரு வகுப்பறையிலும் 1 மீட்டர்ó நீளம், 2.1 மீட்டர் உயரத்தில் இரு வாசல்கள், 2 ஜன்னல்கள் இருக்க வேண்டும். வளாகம் 2 மீட்டர் அகலத்தில் இருக்க வேண்டும்.
நகராட்சிப்பகுதிப் பள்ளிகளில் அதிகபட்ச நீளம் 18 மீட்டர் உள்ள கட்டடத்துக்கும், ஊரகப் பகுதி பள்ளிகளில் அதிகபட்சம் 22.5 மீட்டர் நீளமுள்ள கட்டடத்துக்கும் ஒரு படிக்கட்டு வைக்கவும், அதற்கு மேல் நீளமுள்ள கட்டடங்களுக்கு இரு புறங்களில் படிக்கட்டுகள் வைக்கவும் வேண்டும்.
இது தவிர, பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகள் வைத்திருப்பதும் அவசியம்.
இவ் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதோடு, குடோன்களிலும், ஓலை, ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளின் கீழும் இயங்கக்கூடாது என்பது உள்ளிட்ட 10
கட்டளைகளை கும்பகோணம் பள்ளி விபத்துக்குப் பிறகு நீதிபதி சம்பத் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
இத்தகைய விதிகளுடன் கூடிய பள்ளிக் கட்டடங்களை உள்ளூர் திட்டக் குழுமம், உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்பு, வருவாய்த் துறை, சுகாதாரம், பள்ளி கல்வித் துறை ஆகிய துறைகள் ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்க வேண்டும்.
ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் 203 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் பனியன் குடோன்களிலும், நெரிசல் நிறைந்த தெருக்களிலும் இயங்கி வருகின்றன.
அவ்வாறு இயங்கும் பள்ளிகளில் முறைப்படி நேரடி ஆய்வு செய்யாமலேயே அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பது வேதனை. இதனால், ஆபத்துகளுக்கு மத்தியில் குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து உள்ளூர் திட்டக்குழும கட்டடக்கலை திட்ட அலுவலர் ரமேஷ்குமார் கூறுகையில், பொதுக் கட்டட அங்கீகாரச் சட்டத்தின் கீழ் பள்ளிக் கட்டடங்களுக்கு வட்டாட்சியர் மூலம் உரிமம் வழங்கப்படுகிறது. நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு அத்தகைய உரிமம் வழங்கும்போது விண்ணப்பங்களுடன் உள்ளூர் திட்டக்குழுமம், தீயணைப்புத் துறை உள்ளிட்டவற்றின் ஆய்வறிக்கை இணைக்கப்பட வேண்டும்.
ஆனால், பெரும்பாலான பள்ளிகள் ஒரு ஆண்டில் வேறு கட்டடத்துக்கு மாற்றப்படும் என்பதாகத் தெரிவித்து நேரடியாக வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறையில் அங்கீகாரம் பெறுகின்றனர். ஆனால், அப்பள்ளிகள் தொடர்ந்து அதே இடங்களிலேயே இயங்கி வருகின்றன. வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை உரிமம் வழங்குவதை முறைப்படுத்தினால் மட்டுமே இவ் விதிமீறல்களைத் தடுக்க முடியும் என்றார்.
இதுகுறித்து, உதவித் தொடக்கக் கல்வி (நர்சரி, பிரைமரி) அலுவலர் ஜெகதீசன் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 203 நர்சரி, பிரைமரி பள்ளிகள் உள்ளன.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப் பள்ளிகளின் உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு புதுப்பிக்க வரும் விண்ணப்பங்கள் மீது தகுந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, இதுவரை 60 பள்ளிகளில் ஆய்வு நடத்தியதில் கட்டட விதிமீறல்கள் காணப்பட்ட 15 பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு விதிமுறைகளைப் பார்த்தே உரிமம் வழங்கப்படுகிறது என்றார்.
புதுப்பித்தல் அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதைக் கண்காணிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என்பதே மக்களுடைய கருத்தாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.