முகப்பு
தமிழ்நாடு

தபால் வாக்குகளைப் பதிவு செய்வதில் சிக்கல்: 3.50 லட்சம் தேர்தல் பணியாளர்கள் ஏமாற்றம்

சென்னை, மார்ச் 16: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின்போது தபால் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாத வகையில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், தேர்தல் பணியில் ஈடுபடும் 3.50 லட்சம் அரசு ஊழியர்கள், போலீஸôர் ஏமாற்றம்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:51 PM
பகிர்:

சென்னை, மார்ச் 16: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின்போது தபால் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாத வகையில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், தேர்தல் பணியில் ஈடுபடும் 3.50 லட்சம் அரசு ஊழியர்கள், போலீஸôர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

234 தொகுதிகளுக்கும் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் அலுவலர், உதவித் தேர்தல் அலுவலர் மட்டுமன்றி வாக்குப்பதிவு அலுவலர், இரண்டாம் நிலை வாக்குப்பதிவு அலுவலர், உதவியாளர் என பல்வேறு நிலைகளில் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசு ஊழியர்கள் மட்டுமன்றி, மத்திய அரசின் பல்வேறுதுறை பணியாளர்களும், ரயில்வே பணியாளர்களும் விரைவில் தேர்தல் பணியில் நியமிக்கப்பட உள்ளனர். அந்தந்த துறை, கோட்டம் வாரியாக பணியாளர்களிடம் தேர்தல் பணியாற்றுவது குறித்து கருத்து கேட்டறிந்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் குறைந்தபட்சம் 1,000 தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல தேர்தல் அலுவலகங்கள், வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸôர், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட 1.10 லட்சம் சீருடைப் பணியாளர்கள்  பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான பிரத்யேக அடையாள அட்டைகளையும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

மார்ச் 20-ம் தேதி நியமனக் கடிதம் விநியோகம்:

தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் மார்ச் 20-ம் தேதி நியமனக் கடிதங்களை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நாளில் வாக்குச் சாவடிகளிலும், இதர இடங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபடுவதால் இவர்கள் ஜனநாயகக் கடமையாக தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.

இதைத் தவிர்க்கும் வகையில், தேர்தல் பணியாளர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்யும் வகையில் தபால் வாக்குச் சீட்டுகளை வழங்க ஏற்கெனவே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வரும் சட்டப் பேரவைத் தேர்தலின்போது,  வாக்குச் சாவடியில் பணி புரிய நியமிக்கப்படும் அரசு ஊழியர்கள் பலர் தபால் வாக்கு சீட்டுகளை வழங்கக் கோரி வருகின்றனர்.

ஆனால், தபால் வாக்குச் சீட்டு பெறுவதற்கான படிவத்துடன் (12), தேர்தல் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ள தேர்தல் பணிக்கான உத்தரவு (இ.டி.ஓ.- ஆர்டர்) நகலையும் இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே, தபால் வாக்குச்சீட்டுகளை வழங்க முடியும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு, மார்ச் 20-ம் தேதி தொடங்கும் முதலாவது பயிற்சி முகாமில் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கான கடிதம் மட்டுமே வழங்கப்படும். ஆனால், இவர்களுக்கு தேர்தல் பணிக்கான உத்தரவு தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 12-ம் தேதிதான் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் நடைபெறுவதற்கு சில மணி நேரம் முன்பாக, இந்த உத்தரவை (இ.டி.ஓ.) பெற வேண்டிய நிலை உள்ளது.

இத்தகைய நெருக்கடியான நிலையில், தபால் வாக்கு சீட்டு சம்பந்தப்பட்ட ஊழியருக்கு வழங்கப்படுவதை தேர்தல் நடத்தும் அலுவலர் பதிவு செய்ய வேண்டும். இதில் தொகுதி, வாக்காளர் வரிசை எண், வாக்குச்சாவடி எண், பாலினம் குறித்து குறியீடு செய்ய வேண்டும். இதன் பின்னரே தேர்தல் நடத்தும் அலுவலர் தபால் வாக்குச் சீட்டை சம்பந்தப்பட்ட ஊழியருக்கு வழங்க முடியும்.

ஆனால், இப்போது  வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 12-ம் தேதியே அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான தேர்தல் பொருள்கள் (தபால் வாக்குச்சீட்டுகள் உள்ளிட்ட தேர்தல் பொருள்கள்) மூடி, முத்திரையிடப்பட்டு விடும்.

இதனால், தபால் வாக்களிக்க அரசு ஊழியர்கள் விரும்பினாலும், அவருக்கு தபால் வாக்குச் சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு இல்லை. இதனால் தகுதியிருந்தும் தேர்தல் பணியில் நியமிக்கப்படும் ஊழியர்கள் வாக்களிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதைத் தவிர்க்கும் வகையில், தபால் வாக்குச் சீட்டுகளைப் பெற, அதற்கான படிவத்துடன் அரசு ஊழியர்கள், போலீஸôர் உள்ளிட்டோர் தேர்தல் பணிக்கான உத்தரவுக்கு (இ.டி.ஓ.) பதிலாக தேர்தல் பணி நியமன கடித நகலை வழங்கினால் போதும் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கவனிக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.