தமிழ்நாடு

என்ன வேண்டும் எங்களுக்கு?கரும்பு விவசாயிகள்

தமிழகத்தில் ஜவுளித்தொழிலுக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பைத் தருவது சர்க்கரை உற்பத்தித்தொழில்தான். தொடக்க காலத்தில் லாபத்தில் இயங்கிவந்த கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள், கடந்த 15 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி

ஜெபலின்ஜான்

தமிழகத்தில் ஜவுளித்தொழிலுக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பைத் தருவது சர்க்கரை உற்பத்தித்தொழில்தான். தொடக்க காலத்தில் லாபத்தில் இயங்கிவந்த கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள், கடந்த 15 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

 மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளாலும், நிர்வாகச் சீர்கேடுகளாலும்தான் ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாக ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், விவசாயிகளும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 தமிழகத்தில் கூட்டுறவு, அரசுத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 19 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள சர்க்கரை ஆலையும், மதுரை மாவட்டம் பாண்டியராஜபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலையும் இயங்கவில்லை. மதுராந்தகம் சர்க்கரை ஆலையை அடுத்த பருவத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

 இவை தவிர, தமிழகம் முழுவதும் 25 தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 5 லட்சத்து 32 ஆயிரத்து 210 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கூட்டுறவு, அரசுத்துறை நிறுவன சர்க்கரை ஆலைகளுக்கு 2 லட்சத்து 16 ஆயிரத்து 450 ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

 தமிழகத்தில் மொத்தம் 5 லட்சம் விவசாயிகள் கரும்புச் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் ஆலைகளில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 55 ஆயிரத்து 550 மெட்ரிக் டன் அரவை செய்யப்படுகிறது. கூட்டுறவு ஆலைகளில் 44 ஆயிரத்து 150 மெட்ரிக் டன் அரவை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த அரவைப் பருவம் தொடங்கும்.

 கூட்டுறவு ஆலைகளில் பணப் பட்டுவாடா செய்ய இயலாத நிலை ஏற்படும்போது அரசு அளிக்கும் நிதி உதவி ""வழிவகைக் கடன்'' எனப்படுகிறது. இந்தக் கடன் ரூ.900 கோடியும் வட்டி ரூ.600 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.1500 கோடி நிலுவை உள்ளது. இதை அரசு ரத்து செய்தால் ஆலைகளின் சுமை நீங்கும்; விவசாயிகளுக்கு கரும்புக்கு டன்னுக்கு ரூ.100 கூடுதலாகக்கூட தர முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

 ஆலைகளுக்குக் கிடைக்கும் லாபத்தில் விவசாயிகளுக்குப் பங்கீடு தரும் நடைமுறை இரு ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டுவிட்டது.

 கரும்பு விலை நிர்ணயம்: கடந்த ஆண்டு 9.5 சதவீத கட்டுமானத் திறனுள்ள கரும்புக்கு டன்னுக்கு ரூ. 1,900 என்று நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்தது. 9.5 சதவீத கட்டுமானத்திறனுக்கு மேல் வரும் ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ. 14.60 கூடுதலாக வழங்கப்படுகிறது.

 தனியார் ஆலைகளுக்கென தனியாக கரும்பு சாகுபடி பரப்பு உருவாகுவதில்லை. கூட்டுறவு ஆலைகளுக்காக ஒதுக்கப்பட்ட கரும்பு சாகுபடி பரப்பில் இருந்துதான் பிரித்து வழங்கப்படுகிறது. இதனால், கூட்டுறவு ஆலைகளுக்கான கரும்புக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு நஷ்டத்தில் தள்ளப்படுகின்றன.

 கரும்பு அதிக விளைச்சல் இருக்கும் நேரத்தில் தனியார் ஆலைகள் தங்கள் பகுதி விளைச்சலை முழுமையாக எடுத்துக் கொள்வதில்லை. அப்போது கூட்டுறவு ஆலைகள் இதை எடுத்துக் கொள்ளுமாறு அரசு கூறும். விளைச்சல் குறைவாக உள்ளபோது, கூட்டுறவு ஆலைக்கான விளைச்சல் பகுதியில் இருக்கும் கரும்பையும் தனியார் ஆலைகள் (கள்ளத்தனமாக) கொள்முதல் செய்யும். இதைத் தடுக்க அரசு நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே கூட்டுறவு ஆலைகளின் நஷ்டம் அதிகமாகிறது; தனியார் ஆலைகளின் லாபம் உறுதி செய்யப்படுகிறது.

 லாபம் ஈட்டும் வழிகள்: சர்க்கரை உற்பத்தியில் ஏற்படும் நஷ்டத்தை, கரும்பு சக்கையில் இருந்து மின்உற்பத்தி, எரிசாராய உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தனியார் ஆலைகள் ஈடுகட்டுவதுடன், அதிக லாபத்தையும் ஈட்டுகின்றன.

 ஆனால், கூட்டுறவு ஆலைகளில் 3 ஆலைகளில் மட்டுமே மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது கூடுதலாக 9 ஆலைகளில் மின்உற்பத்தி செய்ய கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 கரும்பு அரவை செய்தால் 1 டன்னுக்கு 45 கிலோ மொலாசிஸ் கழிவு வெளியாகிறது. 1 டன் மொலாசிஸில் 250 லிட்டர் எரிசாராயம் தயாரிக்கலாம். இதன் மூலம் கூட்டுறவு ஆலைகளில் நாளொன்றுக்கு ரூ. 3 லட்சம் வருமானம் பெறலாம். அதேபோல கரும்புச்சக்கையில் இருந்து மின்உற்பத்தி செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ரூ. 12.5 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரை வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 இப்போது கூட்டுறவு ஆலைகளில் மின்உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் முதலீடு செய்துள்ளது. இருப்பினும், எதிர்வரும் 6 அல்லது 7 ஆண்டுகளுக்கு ஆலைக்கு மின்உற்பத்தி மூலம் எவ்வித வருவாயும் கிடைக்காது.

 ஒரு ஏக்கருக்கு 4 டன் கரும்பு சோகை கிடைக்கிறது. இப்போது வயலில் அதை எரிக்கிறார்கள். இதை ஆலைக்கு எடுத்துச் சென்று எரித்து மின் உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு ஆலைக்கும் சுமார் 50 ஆயிரம் டன் சோகை கிடைக்கும். வயலில் எரிக்கும்போது வெளியாகும் புகை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும். இதையே ஆலையில் எரித்தால் மின் உற்பத்திக்குப் பயன்படும். அத்துடன் சோகைக்கு டன்னுக்கு ரூ.200 கிடைத்தாலும் விவசாயிக்கு அது லாபமாக இருக்கும்.

 தவறான விற்பனைக் கொள்கை: தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில்தான் சர்க்கரை விலை உச்சத்தில் இருக்கும். அப்போது சர்க்கரையை விற்பனை செய்தால்தான் சர்க்கரை ஆலைகளுக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும்.

 ஆனால், பண்டிகைக் காலங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை விற்பனை அளவை குறைத்தல், விலை குறைந்த காலங்களில் சர்க்கரை விற்பனை அளவை அதிகரித்தல் என்ற தவறான கொள்கையை வேண்டும் என்றே மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன என்பது ஆலைத் தொழிலாளர்களின் புகாராக உள்ளது.

 இதனால், தனியார் ஆலைகள் பண்டிகைக் காலங்களில் சர்க்கரையை அதிக அளவு விற்பனை செய்து கொள்ளை லாபம் அடைகின்றன. கூட்டுறவு ஆலைகள் சாதாரண காலங்களில் அதிக அளவு சர்க்கரையை விற்பனை செய்து அதிக நஷ்டம் அடைகின்றன.

 இதை ஆராய்ந்தாலே கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உண்மையிலேயே நஷ்டத்தில் இயங்குகின்றனவா, அல்லது இயக்கவைக்கப்படுகின்றனவா என்பது புரிந்துவிடும்.

 இரட்டை நிலை ஊதியம்: கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தொடங்கப்பட்ட காலத்தில் அரசு ஊழியர்களைவிட, ஆலையின் அனைத்து வகை தொழிலாளர்களும் அதிக ஊதியம் பெற்று வந்தனர். ஆனால், இப்போது 20 ஆண்டுகளாக 11 வகை ஊழியர்கள் தவிர மீதம் உள்ள ஊழியர்கள் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பாதியைத்தான் பெறுகின்றனர்.

 சர்க்கரை ஆலையில் 35 ஆண்டுகளாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் அல்லது ஊழியர்கள் இப்போது ரூ. 9 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரைதான் ஊதியமாகப் பெறுகின்றனர். ஆனால், அதே ஆலைகளில் பொதுதொகுப்பு என்ற பெயரில் பணியாற்றும் 11 வகை ஊழியர்கள் சுமார் 30 பேர் ரூ. 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஊதியமாகப் பெறுகின்றனர்.

 கட்டுப்படியாகாத விலை: வெட்டுக் கூலி பிரச்னையால் தமிழகத்தின் பல பகுதிகளில் கரும்பு வெட்டும் பணி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் அமல்படுத்தப்படுவதால் விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. ஒரு டன்னுக்கு ரூ. 700 கூலி கொடுத்தால்கூட கரும்பு வெட்ட கூலியாட்கள் கிடைப்பதில்லை என அங்கலாய்க்கின்றனர் விவசாயிகள்.

 நடவு, கால் மாற்றுதல், சோகை உரித்தல் என அனைத்துப் பணிகளுக்கும் விவசாயக் கூலித் தொகை ஆண்டுக்கு, ஆண்டு உயர்ந்து வருகிறது. உற்பத்திச் செலவும், கரும்புக்கு டன்னுக்கு வழங்கும் குறைந்தபட்ச விலையும் ஒரே நிலையில் உள்ளது. இந்தச் சூழலில் வெட்டுக் கூலி என்பது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை அளித்துள்ளது.

 விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகள்: விவசாயக் கூலி உயர்வு, உரம் உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலை உயர்வு, வெட்டுக் கூலி உயர்வு, லாரி வாடகை உயர்வு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, கரும்புக் கரணை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு என கரும்பு விவசாயிகளுக்கு தொடர் நெருக்கடிகள் உள்ளன.

 ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால் ஒரு ஏக்கரில் 80 டன் கரும்பு வரை சாகுபடி செய்த நிலை மாறி இப்போது, ஏக்கருக்கு 45 டன் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. இது ஒருபுறமிருக்க தொடர் நெருக்கடிகளால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கரும்பு சாகுபடி பரப்பு 10 சதவீதம் குறைந்துவிட்டது.

 தனியார் ஆலைகள் நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களைக் கொள்முதல் செய்து ஆலைகளை இயக்குகின்றன. ஆனால், கூட்டுறவு ஆலைகளில் 40 ஆண்டுகள் பழமையான இயந்திரங்களைக் கொண்டுதான் இயக்கப்படுகின்றன. இவற்றையும் நவீனப்படுத்துவது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT