கலாநிதி மாறன் குடும்பத்துடன் பின்லாந்து பயணம்?
ஏர்செல் - மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்தில் உள்ள சன் டி.வி. நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து சனிக்கிழமை
புது தில்லி, நவ. 6: ஏர்செல் - மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்தில் உள்ள சன் டி.வி. நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து சனிக்கிழமை அதிகாலை பின்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்தப் பயணம் தில்லி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர்செல் நிறுவனத்தை விற்பனை செய்ய அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நிர்பந்தித்தார். இதற்கு கைமாறாக மலேசியாவின் அஸ்ட்ரோ நிறுவனம் மாறன் குடும்பத்தினரின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ. 629 கோடி முதலீடு செய்தது என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கடந்த செப்டம்பர் மாதம் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இதில் அவரது சகோதரர் கலாநிதி மாறன், இங்கிலாந்து அஸ்ட்ரோ ஆல் ஆசியா நிறுவனம், மலேசிய மேக்ஸிஸ் நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநர் ரால்ப் மார்ஷல், மலேசிய உஷாகா டெகாஸ் நிறுவனத்தின் தலைவர் டி. அனந்தகிருஷ்ணன் உள்பட 8 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை, ஆந்திரம், தில்லியில் உள்ள அவர்களது வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கலாநிதி மாறன் தனது மனைவி காவேரி, மகள் காவியா மாறன் ஆகியோருடன் தனி விமானத்தில் பின்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அந்த விமானத்தில் ஏராளமான லக்கேஜும் எடுத்துச் செல்லப்பட்டதாக சென்னை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. கலாநிதி மாறன் குடும்பத்தாரால் எடுத்துச் செல்லப்பட்டவை ஆவணங்களாக இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் எழுப்பப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. துபை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கி எரிபொருள் நிரப்பப்பட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு பின்லாந்து சென்றது.
சி.பி.ஐ. வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் கலாநிதி மாறன் பின்லாந்துக்குச் சென்றுள்ள விவகாரம் குறித்து தில்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறியது:
முதல் தகவல் அறிக்கையில் மட்டும் கலாநிதி மாறனின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பு சி.பி.ஐ.யில் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்களை சி.பி.ஐ. சேகரித்து வருகிறது. மாறன் சகோதரர்கள் உள்பட குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் வரும் நாட்களில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டிருந்தது.
இதைப் புறக்கணிப்பதற்காக கலாநிதி மாறன் திடீரென பின்லாந்துக்கு பயணம் மேற்கொண்டிருக்கக் கூடும் என்கிற சந்தேகம் எழுகிறது. இந்த வழக்கில் கலாநிதி மாறன் பின்லாந்தில் குடியேறினால் அவரை நாடு கடத்த இந்திய அரசு வலியுறுத்த முடியாது. ஏனெனில், அந்த நாட்டுடன் இந்திய அரசு, குற்றவாளிகளை நாடு கடத்தி பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை செய்து கொள்ளவில்லை. அதனால்தான் கலாநிதி மாறன் தனது குடும்பத்துடன் பின்லாந்து சென்றிருக்கிறாரா என்கிற கோணத்திலும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
சாதாரணமாக இதுபோன்ற வழக்குகள் விசாரணையில் இருக்கும்போது, அதில் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கண்காணித்துத் தங்களுக்குத் தெரிவிக்கும்படி "இமிகிரேஷன்' துறைக்குப் புலன் விசாரணை நடத்தும் அலுவலர்கள் எச்சரிக்கை அனுப்புவது வழக்கம். கலாநிதி மாறன் விஷயத்தில், விமான நிலைய இமிகிரேஷன் அலுவலர்களுக்கு அப்படிப்பட்ட எச்சரிக்கை எதுவும் சி.பி.ஐயால் தரப்படாதது ஏன் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.
மேலும், குடும்பத்துடன் விடுமுறைக்குச் செல்வதாக இருந்தாலும், அங்கே கடும் குளிர்காலமாக இருக்கும் நிலையில் ஏன் பின்லாந்துக்குப் போக வேண்டும் என்கிற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
முன்னாள் அமைச்சராக இருந்தவர் சகோதரர் தயாநிதி மாறன் என்பதாலும், காட்சி ஊடகங்களில் செல்வாக்கு உடையவர் கலாநிதி மாறன் என்பதாலும், புலன் விசாரணை அதிகாரிகள், மத்திய அரசின் முக்கியமான பிரமுகர்கள் போன்றோரின் உதவியுடன் கலாநிதி மாறன் வெளிநாடு சென்றிருக்கக் கூடும் என்றும் கருத வாய்ப்பு இருக்கிறது.
""கலாநிதி மாறன் ஆவணங்களுடன் வெளிநாடு சென்று சாட்சியங்களை அழிக்க முற்படக்கூடும் என்றும், அவர் வெளிநாட்டில் தங்கியிருந்து இந்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணை வளையத்தில் இருந்து தப்பிவிட முயற்சிக்கிறார் என்றும் வெளிவரும் தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது. உலகத்தின் எந்த மூலையில் போய் ஒளிந்து கொண்டாலும் எந்தக் குற்றவாளியும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது. குறிப்பாக, ஒரு மிகப் பெரிய தொழில் நிறுவனம் நடத்தும் ஒருவர் தலைமறைவாக இருக்க நினைக்க மாட்டார். அவரது தொழில் பாதிக்கப்படும் என்பது அவருக்குத் தெரியாதா? இதெல்லாம் வீண் பயம்'' என்று சிபிஐயின் உயர் அதிகாரி ஒருவர் கலாநிதி மாறனின் வெளிநாட்டுப் பயணம் பற்றிக் குறிப்பிட்டாலும், சிபிஐ அடுத்த கட்டத்துக்குத் தயாராகி வருகிறது என்பதுதான் நமக்குக் கிடைத்திருக்கும் நம்பகமான தகவல்.