முகப்பு
தமிழ்நாடு

கட்டண உயர்வு ஏன்?

சென்னை, நவ. 17: பஸ் கட்டணம், பால் விலையை தமிழக அரசு திடீரென உயர்த்தியதற்கு, வங்கிகளிடம் இருந்து மாநில அரசு கடந்த மாதம் வாங்கிய ரூ.168 கோடிக்கு மேலான அதிகப் பற்றுதான் (over draft) காரணம் என நிதித் துறை

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:09 PM
பகிர்:

சென்னை, நவ. 17: பஸ் கட்டணம், பால் விலையை தமிழக அரசு திடீரென உயர்த்தியதற்கு, வங்கிகளிடம் இருந்து மாநில அரசு கடந்த மாதம் வாங்கிய ரூ.168 கோடிக்கு மேலான அதிகப் பற்றுதான் (over draft) காரணம் என நிதித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு பல்வேறு சிறப்பு இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, லேப்டாப், ஆடு-மாடுகள் வழங்கும் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களுக்கு மட்டும் பல நூறு கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகின்றன.

அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மத்திய அரசிடம் நிதியுதவி கோரி மனு அளித்தது. அந்த நிதி ஆறு மாதங்களுக்குள் வந்துவிட்டால் நிதி நிலைமையைச் சமாளித்து விடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அந்த நிதி வந்து சேரவில்லை. இது தமிழக அரசுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

அதிகப் பற்று: கடந்த சில மாதங்களாக தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்து வந்தது. இந்தச் சூழ்நிலையில், அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.168 கோடியை "அதிகப் பற்றாக' வாங்க வேண்டிய நிலை உருவானது.

இந்தத் தொகை அடுத்தடுத்த மாதங்களில் மேலும் அதிகரித்து "அதிகப் பற்றாக' கூடுதல் தொகையை வாங்கும் நிலைமை தமிழக அரசுக்கு ஏற்படும் என நிதித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஸ் கட்டணம், பால் விலையை அதிகரிப்பதன் மூலம் ஆவின், போக்குவரத்துக் கழகம் மூலம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக கூடுதல் நிதி அரசுக்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது.

இதன்மூலம், அந்த நிறுவனங்களால் அரசுக்கு ஏற்படும் சுமைகள் ஓரளவுக்குக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மின்சார கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் மின்வாரியத்துக்கு மாதந்தோறும் கொடுக்க வேண்டிய பணத்தின் அளவையும் குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. இதன்மூலம், "அதிகப் பற்றாக' அடுத்த மாதம் முதல் கூடுதலாக எந்தத் தொகையையும் தமிழக அரசு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.