முகப்பு
தமிழ்நாடு

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை: பட்டியல் கேட்கிறது உணவுத் துறை

சென்னை, நவ. 22: பாலியல் தொழிலாளர்களுக்கும் ரேஷன் அட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.  இதற்கான கணக்கெடுப்புடன்கூடிய பட்டியலைத் தருமாறு சமூக நலத் துறை இயக்குநரகத்திடம் உணவு பொருள்

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:12 PM
பகிர்:

சென்னை, நவ. 22: பாலியல் தொழிலாளர்களுக்கும் ரேஷன் அட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

 இதற்கான கணக்கெடுப்புடன்கூடிய பட்டியலைத் தருமாறு சமூக நலத் துறை இயக்குநரகத்திடம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.

 தமிழகத்தில் ஒரு கோடியே 89 லட்சத்து 39 ஆயிரத்து 164 ரேஷன் அட்டைகள் உள்ளன. அதில், ஒரு கோடியே 78 லட்சம் ரேஷன் அட்டைகள் இலவச அரிசி பெறுபவை. காவலர்கள், வனத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் ரேஷன் அட்டைகளைத் தனித்தனி நிறத்தில் தமிழக அரசு வழங்கி வருகிறது.

 இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எதிரொலியாக பாலியல் தொழிலாளர்களுக்கும் ரேஷன் அட்டைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 வழக்கு விவரம் என்ன? பாலியல் தொழிலாளர்களின் நலன்களைக் காக்கும் வகையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புத்ததேவ் கரம்ஷ்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், அனைவரையும் போன்று பாலியல் தொழிலாளர்களையும் கருத வேண்டும் எனவும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது போன்று அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

 இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

 உத்தரவு என்ன? இந்த உத்தரவை கடந்த செப்டம்பர் 15-ம் தேதியன்று நீதிமன்றம் வழங்கியது. "பாலியல் தொழிலாளர்களை சிறப்புப் பிரிவினராக கருத வேண்டும். ரேஷன் அட்டைகள் வழங்கும்போது வழக்கமாக பின்பற்றப்படும் கடுமையான விதிகளையும், நெறிமுறைகளையும் அவர்களிடம் பின்பற்றக்கூடாது. மேலும், ரேஷன் அட்டைகள் வழங்கும்போது முகவரி சரிபார்ப்புக்காக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீடுகளுக்கு அரசு ஊழியர்கள் செல்வது வழக்கம். அதுபோன்ற சரிபார்ப்புக்காக அவர்களுக்கு வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ரேஷன் அட்டையில் அவர்களது தொழில் என்ன என்பதைக் குறிப்பிடக் கூடாது' என்பன போன்ற அறிவுறுத்தல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

 கணக்கெடுப்பு தீவிரம்: ரேஷன் அட்டை வழங்கும் பணிகளை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கவனித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை வழங்கும் பொறுப்பும் அந்தத் துறைக்கு உரியதாகிறது.

 ஆனால், தமிழகத்தில் பாலியல் தொழிலாளர்கள் எத்தனை பேர் என்கிற விவரம் உணவு பொருள் வழங்கல் துறையிடம் இல்லை. இதையடுத்து, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநரகத்திடம் அதுகுறித்த தகவல்களைக் கோரியுள்ளது. பாலியல் தொழிலாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை உடனடியாக துறைக்கு அனுப்பி வைக்கும்படி உணவுப் பொருள் வழங்கல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

 எத்தனை பேர்? மாநிலத்தில் பாலியல் தொழிலாளர்கள் எத்தனை பேர் என்கிற முழு விவரம் சமூக பாதுகாப்புத் துறை வசம் இல்லை என்றே தெரிகிறது. இதுதொடர்பாக இயக்குநரகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது போதிய விவரங்களைத் தெரிவிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், அலுவலர்களும் மறுத்து விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.