முகப்பு
தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி.: சர்ச்சைக்குள்ளான தேர்வுகளுக்கு முடிவு வெளியாகி பணியிடமும் ஒதுக்கீடு

சென்னை, நவ. 23: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தி, சர்ச்சைக்கு உள்ளான தேர்வுகளுக்கு மட்டும் முடிவுகள் வெளியிடப்பட்டு பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.  கிராம நிர்வாக அலு

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:12 PM
பகிர்:

சென்னை, நவ. 23: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தி, சர்ச்சைக்கு உள்ளான தேர்வுகளுக்கு மட்டும் முடிவுகள் வெளியிடப்பட்டு பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

 கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு முடிவுகள் அறிவித்தும் இதுவரை பணியிட ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை.

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர், உறுப்பினர்கள் மற்றும் சில அலுவலர்களின் வீடுகள், அலுவலக அறைகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் சோதனை நடத்தினர். இதனிடையே, கிராம நிர்வாக அலுவலர், குரூப் 2 ஆகிய தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டும் இதுவரை பணியிடம் ஒதுக்கப்படவில்லை.

 குரூப் 1 தேர்வுகள்: துணை ஆட்சியர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் என முக்கிய பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. 2008-2009-ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில் 13 துணை ஆட்சியர் பதவியிடங்களும்,

 8 டி.எஸ்.பி. பதவிகளும் அடங்கும். ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) போன்ற பதவிகளும் குரூப் 1-ல் வருகிறது.

 இந்தத் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு துறை வாரியாக பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர்களாக 23 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் வரும் 28-ம் தேதி பணியில் சேரவுள்ளனர்.

 இதேபோன்று, துணை ஆட்சியர் மற்றும் டி.எஸ்.பி. பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யும் ஏற்பாடு தீவிரம் அடைந்துள்ளது. இதற்கான வேலைகள் தலைமைச் செயலகத்தில் நடந்து வருகிறது.

 கடந்த 2010-ம் ஆண்டு நடத்தப்பட்ட பல் மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, அவர்களுக்கான பணியிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அவர்களும் விரைவில் பணியில் சேர உள்ளனர். 600-க்கும் மேற்பட்ட உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு துறை தோறும் பணி ஒதுக்கீடுகள் நடைபெற்று வருகின்றன.

 குரூப் 1, மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் பல் மருத்துவர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதனாலேயே சோதனை நடத்தப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் தெரிவித்தனர்.

 சர்ச்சைக்குள்ளான தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, பணியிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் வி.ஏ.ஓ., குரூப் 2 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் நிலை என்ன என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

 அந்த இரு தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது பற்றி தேர்வாணையம் விளக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.