முகப்பு
தமிழ்நாடு

புதிய சென்னையின் முதல் மேயர்

விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக சைதை துரைசாமி, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பதவியேற்றார். சென்னை மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு...

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:55 PM
பகிர்:

சென்னை, அக். 25: விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக சைதை துரைசாமி, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.

சென்னை மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவையொட்டி ரிப்பன் மாளிகை விழாக் கோலம் பூண்டிருந்தது. ரிப்பன் மாளிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழிலுடன் காட்சியளித்து.

பதவியேற்பு நிகழ்ச்சியையும், முதல்வர் ஜெயலலிதாவையும் காண்பதற்கு பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் காத்திருந்தனர்.

Advertisement

முதல்வர் ஜெயலலிதா காலை 10.50 மணிக்கு ரிப்பன் மாளிகைக்கு வந்தார்.

மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.

தனி மேடை: மன்றக் கூடத்தில் மேயர் இருக்கைக்கு அருகில் இடதுபுறம் தனி மேடை அமைக்கப்பட்டு அதில் முதல்வர் ஜெயலலிதா அமர இருக்கை போடப்பட்டிருந்தது. மன்றக் கூடத்தினுள் 10.55 மணிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா தனது இருக்கையில் அமர்ந்தார். அவர் மன்றக் கூடத்துக்குள் வந்தபோது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் வாழ்த்து முழக்கம் எழுப்பினர். அருகில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் சட்டப் பேரவைத் தலைவர் ஜெயகுமார், அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், கே.பி. முனுசாமி, ஜி.செந்தமிழன், கோகுல இந்திரா, பி.வி.ரமணா ஆகியோர் அமர்ந்தனர்.

மேயர் இருக்கைக்கு வலதுபுறம் இருந்த இருக்கைகளில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சேதுராமன், ஷேக் தாவூத், அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலகங்கா, தம்பிதுரை, ரபி பெர்னார்ட், வா.மைத்ரேயன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வெற்றிவேல், மாதவரம் மூர்த்தி, குப்பன், கலைராஜன், ராஜலட்சுமி, காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் பலரும் அமர்ந்திருந்தனர்.

மேயருக்கான கருப்பு அங்கி, 18 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை அணிந்திருந்த சைதை துரைசாமி அனைவரையும் வரவேற்று மேயர் இருக்கையில் அமர்ந்தார்.

ஆணையர் கார்த்திகேயன் பதவியேற்பு குறித்த முன்னறிவிப்பு செய்தார். பின்னர் ஆணையர் கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்து வைக்க சைதை துரைசாமி பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு கவுன்சிலர்கள் வார்டு வரிசைப்படி உறுதிமொழியைப் படித்து பதவி ஏற்றுக்கொண்டனர்.

ஒவ்வொருவருக்கும் ஆணையர் கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவர்கள் பதவி ஏற்கும் முன்பு முதல்வர் ஜெயலலிதாவை வணங்கிவிட்டு பதவி ஏற்பு உறுதிமொழியை வாசித்தனர். 6 பேர் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு 7-வதாக கவுன்சிலர் தனரமேஷ் பதவி ஏற்கும்போது 11.05 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா ரிப்பன் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அவரை மேயர் சைதை துரைசாமி, ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் வாயில் வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு 11.20 மணியளவில் மீண்டும் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து பகல் 1.30 மணி வரை நடந்து முடிந்தது. இதில் 5-வது வார்டு உறுப்பினர் கே.பி.சங்கர் தவிர தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் உள்பட 199 பேர் பதவி ஏற்றனர்.

முதல் மேயர்: விரிவாக்கப்பட்ட சென்னை மாநராட்சியின் முதல் மேயராக சைதை துரைசாமி பதவியேற்றதும் 2 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். போர்க்கால அடிப்படையில் குப்பைகள் அகற்றப்படும் என்றும் வட்டம்தோறும் புகார்கள் பெறப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

சென்னை மேயர் பதவியேற்றதைப் போலவே மற்ற 9 மாநகராட்சியின் மேயர்களும் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

10 மேயர்கள்,  124 நகராட்சித் தலைவர்கள் பதவியேற்பு

தமிழகம் முழுவதும் 10 மேயர்கள், 124 நகராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றனர். சென்னை மாநகர மேயராக சைதை துரைசாமி பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார்.

மதுரையில் ராஜன் செல்லப்பா, நெல்லையில் விஜிலா சத்தியானந்த், ஈரோட்டில் மல்லிகா பரமசிவம், தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா, திருச்சியில் எம்.எஸ்.ஆர்.ஜெயா, வேலூரில் கார்த்தியாயினி,திருப்பூரில் விசாலாட்சி, கோவையில் செ.ம.வேலுசாமி, சேலத்தில் சவுண்டப்பன் ஆகியோர் மேயர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். 10 மேயர்களும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நகராட்சித் தலைவர்கள்: 124 நகராட்சிகளின் தலைவர்களும் செவ்வாய்க்கிழமை பதவியேற்றனர். இதில் 89 பேர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். நகராட்சி ஆணையர்கள் அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.

வெள்ளக்கோவில் நகராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர் ஒருவர் மரணமடைந்ததால் அங்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

மறைமுகத் தேர்தல்: அக்டோபர் 29-ம் தேதி காலை 9.30 மணியளவில் மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி துணை மேயர், நகராட்சி, பேரூராட்சித் துணைத் தலைவர்கள் என மொத்தம் 14,019 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

நேரடித் தேர்தலைவிட இதில் கடும் போட்டி நிலவுகிறது. சுயேச்சை உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க பல்வேறு கட்சியினரும் முயற்சித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments