முகப்பு
தமிழ்நாடு

கட்டணச் சேனல்கள் பெற விலை நிர்ணயக் குழு: தமிழக அரசு உத்தரவு

சென்னை, செப்.9: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு கட்டணச் சேனல்களை பெற தமிழக அரசின் சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சம்பந்தப்பட்ட சேனல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:26 PM
பகிர்:

சென்னை, செப்.9: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு கட்டணச் சேனல்களை பெற தமிழக அரசின் சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சம்பந்தப்பட்ட சேனல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரம் பெற்ற குழுவாகும்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. சேவையை முதல்வர் ஜெயலலிதா கடந்த 2-ம் தேதி தொடங்கி வைத்தார். கேபிள் டி.வி. நிறுவனத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் இணைந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆபரேட்டர்களிடம் 1.45 கோடி இணைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கேபிள் டி.வி. சேவை, சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு கேபிளில் முதல் கட்டமாக, இலவச சேனல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. கட்டணச் சேனல்கள் பின்னர் அளிக்கப்படும் என அரசு கூறியுள்ளது.

பொது மக்கள் அதிருப்தி: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் மக்கள் விரும்பக் கூடிய கட்டணச் சேனல்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இலவச சேனல்கள் அதுவும் மற்ற மாநிலங்களின் சேனல்களே அதிகளவு இருப்பதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், கட்டணச் சேனல்களை அரசு கேபிளுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கட்டணச் சேனல்கள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தனியாக விலை நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் யார் யார்? விலை நிர்ணயக் குழுவில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர், தமிழக அரசின் நிதித் துறை (செலவினங்கள்) செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், உள்துறை கூடுதல் செயலாளர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு விலை நிர்ணயக் குழு அமைக்கலாம் என தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜெயராமன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதினார்.

இந்தக் கடிதத்தை பரிசீலித்த தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், மேலாண் இயக்குநர் தெரிவித்த 5 பேர் கொண்ட குழுவை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆறாவதாக சிறப்பு அழைப்பாளராக ஒருவரை அழைக்கவும் முடிவு செய்துள்ளார். இதற்கான உத்தரவை தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ளார்.

குழுவின் பணி என்ன? கட்டணச் சேனல்களைப் பெறுவதற்கான தொடர் பேச்சுவார்த்தையை அரசின் சார்பில் இந்த விலை நிர்ணயக் குழு மேற்கொள்ளும். கட்டணச் சேனல்களின் நிறுவனங்களுடன் இந்தக் குழுவின் பேச்சுவார்த்தை ஓரிரு மாதங்களில் முடியும் எனத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, மக்கள் விரும்பும் சேனல்கள் தங்களது கேபிள் டி.வி.யில் விரைவில் தெரியும் என்று அரசுத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.