சிறப்பு பொது விநியோகத் திட்டம்: ரேஷன் கடைகளில் இருப்பு பாதியாகக் குறைப்பு
சென்னை, ஏப். 13: சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருள்களின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், இரண்டு மாதங்களாக பொருள
சென்னை, ஏப். 13: சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருள்களின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், இரண்டு மாதங்களாக பொருள்களைப் பெற்றவர்களுக்கு அடுத்த மாதத்தில் பொருள் கிடையாது என மக்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை தொடர்கிறது.
விலைவாசி உயர்வால் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு பொது விநியோகத் திட்டம் கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை வெளிச் சந்தையைவிட சற்று குறைவாக இருந்தது. குறிப்பாக, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலை கிலோவுக்கு முறையே ரூ.32, ரூ.36 என விற்கப்பட்டது.
அப்போது, வெளிச்சந்தையில் சமையல் எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.58 என்ற அளவில் விற்றாலும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடையில் பாமாயில் விலை ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தத் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்போது, அவற்றின் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியன கிலோ ரூ.30 எனவும், பாமாயில் கிலோ ரூ.25 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
திட்டம் தொடர்கிறது: ஏழைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் உள்ளதால் சிறப்பு பொது விநியோகத் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியிலும் தொடர்கிறது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கும் அதிகமாக மானியமாக அரசு ஒதுக்குகிறது.
இந்த நிலையில், பொருள்களின் அளவு ரேஷன் கடைகளில் பாதியாகக் குறைக்கப்பட்டதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த கண்ணன் கூறுகையில், ரேஷன் கடைகளில் பருப்பு போன்ற பொருள்கள் மாதக் கடைசியில் விற்பனை செய்யப்படுவதில்லை. ஊழியர்களிடம் கேட்டால் இருப்பு இல்லை என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இதே நிலை நீடிக்கிறது என்றார்.
இந்தப் பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ரேஷன் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும்
10-ம் தேதி வாக்கில் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. கடைகளில் குறைந்தபட்சம் 13 நாள்களுக்கு பொருள்களை வழங்குகிறார்கள். அதன்பின், பொருள்கள் தீர்ந்து விடுகின்றன.
சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், இரண்டு மாதங்களுக்கு தொடர்ச்சியாக பொருள்கள் வாங்காதவர்களுக்கு அடுத்த மாதத்தில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு மாதமும் அனைவருக்கும் அனைத்துப் பொருள்களும் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
கடைகளுக்கு அனுப்பப்படும் பொருள்களின் அளவும் 60 சதவீதத்தை ஒட்டியே இருக்கிறது என்று விளக்கம் அளித்தனர்.