சலுகைகள் கிடைக்காமல் எஸ்.சி., எஸ்.டி. இடைநிலை ஆசிரியர்கள் அவதி
தருமபுரி: கல்வித் தகுதியிருந்தும் பதவி உயர்வு, ஊக்க ஊதியம், தகுதி ஊதியம் உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் கிடைக்காமல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்களாகவே சுமார் 600 பேர் பணியாற்றி வருகின்றனர். எ
தருமபுரி: கல்வித் தகுதியிருந்தும் பதவி உயர்வு, ஊக்க ஊதியம், தகுதி ஊதியம் உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் கிடைக்காமல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்களாகவே சுமார் 600 பேர் பணியாற்றி வருகின்றனர்.
எஸ்சி, எஸ்டி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்கள்தான் இவ்வாறு அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழக தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1997 முதல் 2002 வரையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இன சுழற்சி பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் கிடைக்காத நிலை இருந்தது.
Advertisement
எனவே, இந்த இனத்தில் பிஏ, எம்ஏ, பிஎட் முடித்து பணிக்காக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களே இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், இடைநிலை ஆசிரியருக்கான ஊதியத்தில் நியமிக்கப்பட்டனர்.
இந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நியமனத்தின்போது, அரசு விதித்த நிபந்தனைகள்தான், இப்போது இவர்களுக்கு பெரும் தடையாக உள்ளது. எந்தப் படிப்பு முடித்திருந்தாலும் இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதம் மட்டுமே வழங்கப்படும். சிறப்புச் சலுகை இல்லை. உயர்கல்விக்கான சிறப்பு ஊதியம் வழங்கப்பட மாட்டாது. நேரடி பதவி உயர்வோ, தனித் தேர்வோ கோர முடியாது. மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரிய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அப்போது, அரசுப் பணி கிடைத்தால்போதும் என்று பணியில் சேர்ந்தனர். ஆனால், இப்போது பிற துறைகளில் இருந்து ஆசிரியர் பணிக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை தங்களுக்கு வழங்கப்படாமல் உள்ளதே என்று ஆதங்கப்படுகின்றனர்.
பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதியுடையோர் ரூ. 5000-175-9000 என்ற அடிப்படை ஊதியம் பெற வேண்டும். ஆனால், ரூ. 4500-125-7000 என்ற அடிப்படை ஊதியம் மட்டுமே பெறுகின்றனர். இந்தப் பாகுபாடு காரணமாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 4 லட்சத்துக்கு மேல் ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியல் சாசனப் பிரிவு 46-ன் படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு சமூக அநீதிகளிலிருந்தும், எல்லா வகையான சுரண்டல்களிலிருந்தும் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆனால், அரசே நிபந்தனையென்ற பெயரால் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி, பதவி உயர்வு வாய்ப்புகளையும், சலுகைகளையும் மறுத்து வருவது ஏற்புடையதல்ல என்கின்றனர் பாதிக்கப்பட்ட எஸ்சி, எஸ்டி இடைநிலை ஆசிரியர்கள்.
இதுகுறித்து, தொடக்கக் கல்வித்துறை வட்டாரத்தினர் கூறியது: டிஆர்பி, உதவித் தொடக்க கல்வி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை எழுதி பதவி உயர்வுக்குச் சென்றிருக்கலாம். இடைநிலை ஆசிரியர்களாகவே இருந்துவிட்டு இப்போது பதவி உயர்வு கோரினால், அந்த இடத்தில் ஏற்கெனவே உள்ளவர்கள் பாதிக்கப்படுவர். மேலும், பணி நியமனத்தின்போது அரசாணை நிபந்தனையை ஏற்றுள்ளனர். இப்போது, அது தளர்த்தப்பட வேண்டுமெனில் அரசு முடிவு செய்ய வேண்டும் என்றனர்.
அரசாணை நிபந்தனைகள் தளர்த்தப்படுமா?
அரசு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தருமபுரியைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் பெ. சரவணன் கூறியது:
சத்துணவுத் திட்டத்தில் அமைப்பாளாரக இருந்தவர்கள், அமைச்சுப் பணியில் எழுத்தர்களாக இருந்தவர்கள்கூட பிஎட் கல்வித் தகுதி பெற்றிருந்தாலோ, பணிக்கு வந்த பின்னர் படித்து முடித்திருந்தாலோ அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தனியாகத் தேர்வு நடத்தி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்கி, முதுநிலை ஆசிரியர் என பதவி உயர்வும் வழங்குகிறது. மேலும், ஆசிரியர் பணியையே சார்ந்திராமல் பல ஆண்டுகள் வேறு பணியிலிருந்துவிட்டு வரும் இவர்கள் தலைமையாசிரியர்களாகவும் பொறுப்புக்கு வருகின்றனர். ஆனால், 15 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிலேயே இருந்தும் எங்களுக்குப் பதவி உயர்வோ, ஊதிய உயர்வோ வழங்காமல் இருப்பது அநீதியானது.
அரசாணை வெளியிடும்போதே தகுதியான எஸ்சி, எஸ்டி இடைநிலை ஆசிரியர் பணிநாடுவோர் கிடைக்கும் வரை என்று கால நிர்ணயம் செய்திருந்தால், பிஎட், எம்ஏ, எம்பில் முடித்தும் இடைநிலை ஆசிரியராகவே தொடர வேண்டிய கட்டாயம் இருந்திருக்காது.
எஸ்எஸ்ஏ மூலம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்குகூட நிபந்தனைகளைத் தளர்த்தி பதவி உயர்வு, ஊதிய உயர்வு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதேபோல், எங்களுக்கும் ஆவன செய்ய வேண்டும் என்றார் அவர்.