பெயரளவுக்கு நிறைவேற்றப்படும் பிளாஸ்டிக் ஒழிப்பு தீர்மானங்கள் நடைமுறைக்கு வருமா?
பொன்னேரி, ஆக. 16: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சி செய்யாமல் பேரூராட்சிக் கூட்டங்களில் பெயரளவுக்கு பிளாஸ்டிக் கழிவு பொருள்களை ஒழிக்க த
பொன்னேரி, ஆக. 16: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சி செய்யாமல் பேரூராட்சிக் கூட்டங்களில் பெயரளவுக்கு பிளாஸ்டிக் கழிவு பொருள்களை ஒழிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தி வீசி எறியும் பிளாஸ்டிக் கழிவுகள் பூமியில் புதைந்து போவதால் அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வது தடுக்கப்படுகிறது. அதே போன்று பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்து எரிப்பதன் காரணமாக பொதுமக்களை பாதிக்கும் விஷ வாயுக்கள் தோன்றும் என சுற்றுச்சூழல் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இது போன்று பல்வேறு தீமைகளை விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் 40 மைக்ரானுக்குக் குறைவாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். அத்துடன் பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க பேரூராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் இருந்து அனைத்துப் பேரூராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ள இடங்களில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டு அங்கு முழுமையாக அவை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பேரூராட்சிகளில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரூராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு நின்று விடாமல் பேரூராட்சி எல்லைகுட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், வெற்றிலைப்பாக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு சிறுகடைகள் நடத்தி வருபவர்கள் மற்றும் காய்கறி, பூக்கடை உள்ளிட்ட சாலையோர வியாபாரிகளை அழைத்து பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுபத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூற வேண்டும்.
அதன் மூலம் பிளாஸ்டிக் பொருள்கள் குறித்து அவர்களிடேயே விழிப்புணர்வு ஏற்படும் பட்சத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம், கோயில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் விளம்பரத் தட்டிகளை அமைத்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.