சென்னையில் சில பகுதிகளில் கஞ்சா வீடு தேடி விற்பனை செய்யப்படுவதால் இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதை போலீஸôர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. அப்போது, காவல்துறை ஓரளவுக்கு கஞ்சா கடத்தலைக் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால், இப்போது சென்னைக்கு அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாகவும், குறிப்பாக ஆந்திரத்தில் நக்ஸல்கள் ஆதிக்கம் மிகுந்த மலைப் பகுதிகளில் இருந்து கஞ்சா சென்னைக்கு கொண்டு வரப்படுவதாகவும், இந்தக் கடத்தல் அண்மைக் காலமாக அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஆந்திர மாநிலம் பாடகிரி மலைப் பகுதியில் இருந்து வடபழனி வழியாக காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 45 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தச் சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்பு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆந்திரத்தில் இருந்து வந்த ரயிலில் கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் கிடைக்கும் கஞ்சாவைவிட, ஆந்திரத்தில் இருந்து கொண்டு வரப்படும் கஞ்சா தரமானதாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் அங்கிருந்து கடத்தி வரப்படுவதாக போலீஸôர் தெரிவிக்கின்றனர்.
ஆந்திரத்தில் ரூ. 2,500-க்கு வாங்கப்படும் கஞ்சா, இங்கு ரூ. 10,000 வரை விற்கப்படுவதாகவும் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால், சென்னையில் கஞ்சாவுக்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கஞ்சா அதிகமாக விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வளவு காலம் மறைவாக விற்கப்பட்ட கஞ்சா இப்போது சென்னைக்குள் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறது.
ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மெரினா கடற்கரை, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகள், மேன்சன்களில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை தேடி வந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் கூறுகிறார்.
இளைஞர்கள் எந்த நேரத்தில் கேட்டாலும், கஞ்சாவைத் தேடி வந்து ஹோம் டெலிவரி செய்வதாகவும் அவர் கூறுகிறார். சில இடங்களில் இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தேநீர் விற்பவர்கள், கஞ்சாவையும் சேர்த்து விற்பதாகவும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறுகிறார்.
மேலும், கல்லூரி வளாகங்களுக்குள்ளும் கஞ்சா விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதாக பேராசிரியர் ஒருவர் கூறுகிறார்.
நடவடிக்கை இல்லை: இது தொடர்பாக சிலர் காவல்துறையினரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக கஞ்சா விற்பனை எவ்வித தடையுமின்றி நடைபெறுகிறது. அவ்வப்போது சில விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் இனிமேலாவது காவல்துறை அக்கறை எடுத்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நலனைக் கருத்தில்கொண்டு கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.