விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அவலூர்பேட்டையில் உள்ள சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராழி மண்டபத்தைப் புதுப்பித்துப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
÷செஞ்சி தாலுகாவில் உள்ள கிராமங்களில் கலைநயம் மிக்கக் கோயில்கள், வழிப்போக்கர்கள் தங்கிச் செல்லும் மண்டபங்கள், குளங்கள் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன. இவை பெரும்பாலும் பராமரிப்பின்றி பாழாகி வருகின்றன. ஒரு சில மண்டபங்கள், குளம் உள்ளிட்டவை பொதுமக்கள் பராமரிப்பில் இருந்து வருகின்றன.
÷இந்நிலையில் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள அவலூர்பேட்டையில் திருவண்ணாமலை செல்லும் வழியில் பெத்தான்குளம் உள்ளது. இதன் நடுவே கலை நயம் மிக்க நீராழி மண்டபம் உள்ளது.
÷குளத்தின் நடுவில் உள்ள பாறையின் மீது நான்கு கால் தூண்களுடன் சதுர வடிவில், 3 பக்கத்திற்கும் கல்லில் ஆன ஜன்னல்கள் பக்கத்திற்கு 6 வீதம் மிக அற்புதமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
÷இது சுமார் 600 ஆண்டுகள் முற்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அந்த காலத்தில் இவ்வழியே திருவண்ணாமலை கோயில் தீபத் திருவிழாவிற்கு நடந்து செல்பவர்களின் தாகத்தைத் தீர்க்கவும், ஊர் மக்களின் தாகத்தைப் போக்கவும் இந்தக் குளம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. எந்த காலத்திலும் நீர் வற்றாத குளமாக உள்ளது.
÷தற்போது நீராழி மண்டபத்தைச் சுற்றி செடி கொடிகள் வளர்ந்து மண்டபத்தை சிதிலம் அடையச் செய்து வருகிறது. குளமும் பராமரிப்பின்றி உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த குளம், அதன் நடுவே உள்ள நீராழி மண்டபத்தையும் புனரமைத்துப் பாதுகாக்க அவலூர்பேட்டை ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.