கருகிய பயிர்களுக்கு காப்பீடு மூலம் இழப்பீடு
மழை பொய்த்து பயிர்கள் கருகிய நிலையில், அதை பயிரிட்டுள்ள விவசாயிகள் குறித்த
மழை பொய்த்து பயிர்கள் கருகிய நிலையில், அதை பயிரிட்டுள்ள விவசாயிகள் குறித்த கணக்கெடுப்பை வருவாய்த் துறை மேற்கொண்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்பு சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு உரிய முறையில் இழப்பீட்டுத் தொகை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு டெல்டா விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுக்கான பிரிமியத் தொகையைச் செலுத்துவதற்கான கடைசி தேதி வரும் 15 என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் என காவிரி டெல்டா பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். போதிய மழை இல்லாமலும், கர்நாடகம் காவிரி நீரைத் தர மறுப்பதாலும் பயிர்கள் அனைத்தும் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். பயிர் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பயிர் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் மற்றும் திருத்தப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
காப்பீட்டுத் திட்டங்களுக்காக காவிரி டெல்டா விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணத்தை அரசே செலுத்தும் எனவும், இதன் மூலம் விவசாயிகள் அனைவருக்கும் விவசாய காப்பீட்டு வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
அலுவலர்கள்-அதிகாரிகள் தீவிரம்: காப்பீட்டுக் கட்டணத்தை அரசு செலுத்த வேண்டுமானால் எத்தனை விவசாயிகள் எவ்வளவு பரப்பில் சாகுபடி செய்துள்ளார்கள்
என்ற விவரம் அவசியம் தேவை. இந்த விவரங்களைச் சேகரிக்கும் பணியை தமிழக வருவாய்த் துறை மேற்கொண்டுள்ளது. இதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலரிடமும் விவசாயிகளின் நிலங்களுக்கான அடங்கல் பதிவேடுகள் இருக்கும். இந்த பதிவேட்டில் நிலங்களை வைத்துள்ள உரிமையாளரின் பெயர், அவர் பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் பரப்பு உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும். இந்த நிலையில், காப்பீட்டுத் திட்டங்களுக்காக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்தில் இருந்தும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு விவசாய நிலங்களின் பட்டா, சிட்டா விவரங்கள் தரப்பட்டு அவை அடங்கல் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் பணி அளிக்கப்பட்டது. இந்தப் பணியை கிராம நிர்வாக அலுவலர்கள் முடித்துள்ளனர்.
விவசாயிகள் எழுப்பும் கேள்விகள்: பட்டா, அடங்கல் பதிவேடுகளுடன் ஒப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் பதிவு செய்த விவரங்கள் தெளிவாக இல்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
அந்த விவரங்கள் சரியானதுதானா என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை. இதனால், இழப்பீட்டுத் தொகை உண்மையான விவசாயிகளுக்குக் கிடைக்குமா என்று அவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
நிலத்தை குத்தகைக்கு எடுத்து பலரும் விவசாயம் செய்கின்றனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர் என்ற வகையில் அது வேறு ஒருவருடைய பெயராக இருக்கும். பயிர் கருகினால் நஷ்டத்தைச் சந்திப்பவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்தான்.
அரசு இழப்பீடு அளிக்கும் பட்சத்தில், அது குத்தகைக்கு எடுத்தவருக்கு செல்லாமல், உரிமையாளருக்குச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, கிராம நிர்வாக அலுவலர்கள் தயாரித்துள்ள விவசாயிகளின் பட்டியலை அனைவரும் பார்வையிடும் வகையில் வெளியிட வேண்டும்.
மேலும், நிலத்தை வாங்கிய பலரும் அதை உரிய முறையில் பெயர் மாற்றம் செய்யவில்லை. பழைய உரிமையாளரின் பெயரிலேயே இருக்கும்பட்சத்தில் உண்மையிலேயே விவசாயம் செய்து நஷ்டம் ஏற்பட்ட விவசாயிக்கு எந்தப் பலனும் கிடைக்காமல் போய்விடும். எனவே, நிலத்தின் உரிமையாளர் யார் என்ற முறையில் கணக்கெடுப்புச் செய்யாமல், நிலத்தில் பயிரிட்டுள்ள விவசாயி யார் என்பதை அறிந்து அவர்களுக்கு இழப்பீட்டை உரிய முறையில் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை டெல்டா மாவட்டங்களில் எழுந்துள்ளது.