புயலால் தட்பவெப்ப நிலையில் மாற்றம்: பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிகள்
புதுச்சேரி: பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து
பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர் பகுதிகளில் சமீபத்தில் வீசிய புயலால், ஏராளமான மரங்கள் அழிந்தன. சூரிய ஒளியில் இருக்கும் வெப்பத் தாக்கத்தை மரங்களின் இலைகள் கிரகித்து, மனிதர்களும், பயிர்களும் வெப்பத் தாக்குதலில் இருந்து தப்பிக்க உதவி வந்தன.
Advertisement
இப்போது மரங்களும் இல்லை, பெரும்பாலான மரங்களில் இலைகளும் இல்லை. ÷இப்போது, சூரிய ஒளியிலிருந்து பூமியைத் தாக்கும் வெப்பத்தின் அளவும் அதிகரித்திருக்கிறது. இதனால், பூமியின் தட்ப வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு, பகலில் கடும் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது.
இது மனிதர்களுக்கு உகந்ததல்ல என்பதோடு, பயிர்களுக்கும் இவை உகந்ததல்ல. இந்த மாறுபட்ட தட்பவெப்ப நிலையால், பூச்சிகளின் இனப்பெருக்கம் இயல்பாகவே அதிகரித்திருக்கிறது. இதனால் பல பயிர்கள் பூச்சிகளின் தாக்குதலில் சிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக இச்சமயத்தில் பயிரிடப்பட்டிருக்கும் மணிலா, உளுந்து, மாமரம், புதிதாக நடப்பட்ட கரும்புகள், நெல் நாற்றுகள், வெண்டை, கத்தரி, பப்பாளி ஆகியவற்றை பூச்சிகள் தாக்கும் அபாயம் அதிகரித்திருக்கிறது.
இவற்றை சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, மாவுப்பூச்சி, இலை பேன், வெள்ளை ஈ ஆகியவை தாக்குகின்றன. மேலும், இலை உண்ணும் புழுக்களான புரட்டீனியா புழுக்கள், பச்சை புழுக்கள் (ஹிலியாதீஷ்) அதிகம் தாக்குகின்றன.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, பயிர்களைக் காக்க எளிய வழிகளைப் பின்பற்றினாலே போதும் என்கிறார் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலை பேன் பூச்சி: நெல் நாற்றங்காலில் இலை பேன் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த ஒரு செட் நாற்றங்காலுக்கு ஒரு லிட்டர் தண்ணீரை விசை தெளிப்பான் மூலம் பூச்சிகள் மீது அடிக்க வேண்டும். கீழே அவை விழும். நாற்றங்காலில் தண்ணீர் நிரப்பி, அதை வெளியேற்றினால் பேன்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விடும். இல்லையெனில், நாற்றங்காலை 15 நிமிடங்களுக்கு நீரில் மூழ்கச் செய்து திறந்து விட்டால், பேன்கள் ஒழியும்.
8 சென்ட் நாற்றங்காலுக்கு 100 மி. வேப்ப எண்ணெய்யை இலையின் மீது தெளித்தும் பேன்களை ஒழிக்கலாம்.
அசுவினி பூச்சி: கால் கிலோ பச்சை மிளகாயை ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, நன்றாக அரைத்து, அதைத் துணியில் வடிகட்டி கிடைத்த சாற்றை, பயிர்களின் மீது தெளித்து விட வேண்டும். இல்லையெனில், ஒரு லிட்டர் தண்ணீரில் 4 கிராம் வெரிட்டிசீலியம் லீகானி மருந்துக் கலந்து தெளித்தால் அசுவினி பூச்சி சாகும்.
மாவுப்பூச்சி: ஒரு லிட்டர் தண்ணீரில் 40 மி. மீன் எண்ணெய் சோப்பு கரைசலைக் கலந்து தெளித்தால், மாவுப்பூச்சியால் பயிர் மீது படர்ந்துள்ள வெண் படலம் கீழே விழும். அசிரோபேகஸ் ஒட்டுண்ணியை ஏவிவிட்டும் மாவுப் பூச்சியை ஒழிக்கலாம்.
வெள்ளை ஈ: ஒரு ஏக்கருக்கு 40 பொறி வீதம் மஞ்சள் வண்ணத்தினாலான ஒட்டுப் பொறியை (மஞ்சள் நிறத்தினாலான பெயர்ப் பலகையைப் போன்றது) நட வேண்டும். கத்தரி, வெண்டை விதைக்கப்பட்ட 20 நாள்களுக்குள்ளாக இதை நட்டுவிட வேண்டும்.
பயிரை நோக்கிப் பறந்து வரும் ஈக்கள், மஞ்சள் நிறத்தால் கவரப்பட்டு, அதில் தடவப்பட்ட கிரீஸ் மீது அமர்ந்து சிக்கிக் கொள்ளும்.
தத்துப்பூச்சி: மாமரத்தில் பூக்கும் பூக்கள் பழுப்பு நிறமேறி, கருகிவிடும். தத்துப் பூச்சிகள் அதன் உமிழ்நீரை பூக்கள் மீது உமிழ்வதுதான் இதற்குக் காரணம். இதனால் மகரந்த சேர்க்கை நடைபெறாமல், மா விளைச்சல் பாதிக்கப்படும்.
இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி. வேப்ப எண்ணெய் கலந்து அடிக்க வேண்டும். அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 4 கிராம் பிவேரியா பேசியானா எனும் உயிர் ரக பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து தெளிக்க வேண்டும்.
புரட்டீனியா புழுக்கள், பச்சை புழுக்கள் (ஹிலியாதீஷ்): இந்த புழுக்களைக் கட்டுப்படுத்த, காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் என்.பி. வைரஸ் எனும் மருந்தை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குகிறது. மனிதர்களுக்கு நன்மை தரும் வகையிலும், புழுக்களை மட்டும் கொல்லும் வகையிலும் தயாரிக்கப்பட்ட உயிர் ரக வைரஸ் இது.
இதை ஒரு லிட்டர் தண்ணீரில் 250 மி. அளவுக்குக் கலந்து, அதோடு ஒரு கிலோ உப்பு கலக்காத வெல்லத்தையும் சேர்ந்து தெளிக்க வேண்டும். இதில் சுத்தமான தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதே போல, மாலை 4 மணிக்குப் பிறகே இதை பயிர்களின் மீது தெளிக்க வேண்டும். காரணம், உப்பு பயன்படுத்தினாலோ, வெயிலின் தாக்கம் அதிகமிருந்தாலோ இந்த வைரஸ் அழிந்துவிடும்.
இந்த புழுக்களின் முட்டைகளைக் கட்டுப்படுத்த, ஒரு ஏக்கருக்கு 2 சி.சி. டிரைகோகிராமா கைலோனிஸ் ஒட்டுண்ணிகளை வெளியிட வேண்டும். இவை முட்டைகளை அழித்துவிடும் என்றார்.