அடிப்படை வசதிகளின்றி ஒரு ரயில் நிலையம்
புதுச்சேரி, பிப். 9: புதுச்சேரி மாநிலத் தலைநகரில் உள்ள ஒரே ரயில் நிலையமும் போதிய வசதிகளின்றி இருப்பதாக ரயில் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இந்த ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி, பயணிகளுக்குத் த
புதுச்சேரி, பிப். 9: புதுச்சேரி மாநிலத் தலைநகரில் உள்ள ஒரே ரயில் நிலையமும் போதிய வசதிகளின்றி இருப்பதாக ரயில் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இந்த ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி, பயணிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் செய்துதர வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்தும், இதன் வழியேயும் தினசரி 20-க்கும் மேற்பட்ட ரயில்களே இப்போது இயக்கப்படுகின்றன. தினசரி 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இப்போது பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்கு போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை.
24 பெட்டிகள் கொண்ட ரயிலை நிறுத்த போதிய நீளத்தில் நடைமேடை இல்லை. 19 பெட்டிகளைக் கொண்ட ரயிலுக்கான நடை மேடை மட்டுமே உள்ளது. இதனால், நடைமேடைக்கு வெளியே நிற்கும் முன்பதிவற்ற, பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட நேர்கிறது. முதல் இரு நடைமேடைகளில் மட்டுமே ரயில்களுக்கான தண்ணீர் நிரப்பும் வசதி இருக்கிறது. நடைமேடை எண் 3 மற்றும் 4-ல் அதுவும் கிடையாது. ரயில் நிலையத்தின் சுகாதாரப் பணிகளும் அவ்வப்போது சரிவர நடைபெறுவதில்லை.
Advertisement
இங்கு பயணிகள் தங்கும் குளிர்சாதன வசதி கொண்ட அறைகளில், மாதத்தில் 20 நாள்களுக்குத் தண்ணீர் வருவதில்லை என்று ரயில் பயணிகள் புகார் கூறுகின்றனர்.
காலை 8 முதல் பிற்பகல் 1.50 மணி வரை ரயில் போக்குவரத்து ஒன்று கூட கிடையாது. இந்த இடைவெளியை சரி செய்ய, தொடர்ந்து பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும். இதனால், பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், வருவாயும் கூடுதலாகும்.
காரணம், புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்துக்குப் பயணிக்க ரயில் கட்டணம் ரூ.6. பஸ்ஸில் இது மிக அதிகம். ரயில் இருக்கும் நேரத்திலாவது பயணிக்கலாம் என்றாலும், ரயில் நிலையத்தை எளிதாக அடைய பஸ் வசதியும் கிடையாது. காரணம், ரயில் நிலையச்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டிருப்பதுதான். ஆட்டோவுக்கு ரூ.100 கொடுத்து ரயில் நிலையம் வந்து, இங்கிருந்து ரூ.6 கொடுத்து விழுப்புரம் பயணிப்பதைவிட, நேரடியாக விழுப்புரத்துக்குப் பஸ்ஸில் செல்வது மேல் என்ற கருத்தையே மக்கள் முன்வைக்கின்றனர். எனவே, ரயில் நிலையத்துக்குத் தொடர்ந்து பஸ் வசதியை செய்துதர வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல, புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து செல்லும் நீண்ட தூர ரயில்களில் முன்பதிவு செய்ய மிகக் குறைந்த இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரியிலிருந்து கிளம்பும் ரயிலில் முன்பதிவு செய்தாலும், பலர் காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டியிருக்கிறது. சென்னையிலிருந்தும், பிற பெரிய நகரங்களில் இருந்தும் பயணிப்போருக்கு இடங்களை ஒதுக்கீடு செய்து விடுகின்றனர். இதை முற்றிலுமாக ரத்து செய்வது முடியாவிட்டாலும், புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தரலாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
பயணிகளிடமிருந்து நேரடி வருவாய் குறைவதால், ரயில் நிலையம் தரத்தில் பின்தங்கியிருக்கிறது. அப்படியிருந்தும், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் நேரடி டிக்கெட் விற்பனை மூலம் சுமார் ரூ.11 லட்சம், முன்பதிவு மூலம் சுமார் ரூ.81 லட்சம், சரக்குகள் மூலம் ரூ.1.5 லட்சம் என சுமார் ரூ.1 கோடிக்கு மேல் வசூலாகியிருக்கிறது.
வருவாய் குறைவதால், இந்த ரயில் நிலையம் இன்னமும் இ அந்தஸ்து ரயில் நிலையமாகவே இருக்கிறது. இதனால், குறிப்பிட்ட சில வசதிகளை மட்டுமே ரயில்வே நிர்வாகத்தால் செய்துதர முடியும்.
இந்த ரயில் நிலையத்தை சி தரத்துக்கு உயர்த்தினால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகள் தீர வாய்ப்பிருக்கிறது. எனவே, வருவாயைக் கொண்டு கணக்கிடாமல், புதுச்சேரி மாநிலத்தின் தலைநகரில் உள்ள இந்த ரயில் நிலையம் என்பதைக் கருத்தில் கொண்டு, சிறப்பு ஏற்பாடாக, இதன் தரத்தை உயர்த்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.