அடிப்படை வசதிகள் அறவே இல்லாத அரசு மருத்துவமனை
திருத்தணி, பிப். 11: அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. மேலும் அடிப்படை வசதிகள் இல்லாததால், நோயாளிகள் அவதிக்கு உள்ளாகியு
திருத்தணி, பிப். 11: அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. மேலும் அடிப்படை வசதிகள் இல்லாததால், நோயாளிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் அரசு பொது மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனைக்கு காசிநாதபுரம், வேலஞ்சேரி, சத்திரஞ்செயபுரம், அகூரி, கோரமங்கலம், நத்தம், கன்னிகாபுரம், மாம்பாக்க சத்திரம், செருக்கனூர் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
போதுமான படுக்கைகள் இல்லை: திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் 45 படுக்கைகள் மட்டுமே உள்ளதால், பெரும்பாலான உள்நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சென்னை, திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இங்கு, புறநோயாளிகள் பகுதி, பிரசவ வார்டு, பெண்கள் பகுதி, பொது மருத்துவம், ரத்தப் பரிசோதனை, ஆண்கள் அறுவை சிகிச்சை, ஆண்கள் பொது மருத்துவம், கண் மருத்துவம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், நாள்தோறும் 500 முதல் 600க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
டாக்டர்கள் பற்றாக்குறை: அரசு பொதுமருத்துவமனையில் மொத்தம் 20 டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 12 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களும் விடுமுறை, வார விடுமுறை என சென்று விடுவதால் ஒரு நாளைக்கு 5 முதல் 6 டாக்டர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். மேலும் இங்கு போதுமான நர்ஸ்கள், பணியாளர்கள் இல்லாததால், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்க முடியாமல், டாக்டர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
மேலும், நுழைவுச் சீட்டு வழங்குவதற்கு ஒரு பணியாளர் மட்டுமே இருப்பதால், நோயாளிகள் பலமணி நேரம் காத்திருந்து நுழைவுச் சீட்டு பெற்றுச் செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. மேலும், ஊசி போடும் இடம், மருந்து வழங்கும் இடங்களிலும் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் கூலி வேலை செவ்யோர். அவர்கள், நோய்க்கு சிகிச்சை பெற்று உடனே திரும்ப முடியாததால், அன்றைய தினம் முழுவதும் வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
முள்புதரில் அரசு மருத்துவமனை: மருத்துவமனையில் எந்த பிரிவுக்குச் சென்றாலும் சுற்றிலும் முள்புதர்களாகவே காட்சியளிக்கிறது. இதனால் கொடிய விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்புகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளதாக நோயாளிகள் அஞசுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மருத்துவமனைக்குள் தேள் போன்ற விஷ ஜந்துக்கள் உலா வருவதாகவும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
உடனடி நடவடிக்கை தேவை: எனவே திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு போதிய டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கவும், அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூக்கைத் துளைக்கும் துர்நாற்றம்
திருத்தணி அரசு பொதுமருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் மின் விளக்குகள் இருந்தும் மின்சார வசதி கிடையாது. இதனால் பகல் நேரத்தில் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது.
மின்வசதி இல்லாததால் எப்போதும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பீரகுப்பம், மத்தூர், ஆர்.கே. பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் நிகழும் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கே கொண்டு வந்து துர்நாற்றத்தில் பிரேத பரிசோனை செய்து செல்வேண்டிய நிலை பல மாதங்களாக நீடித்து வருகிறது.