முகப்பு
தமிழ்நாடு

வி.ஏ.ஓ. தேர்வு: மாத இறுதிக்குள் பணியிட ஒதுக்கீடு

சென்னை, பிப். 13: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் வெற்றி பெற்றோருக்கு இந்த மாத இறுதிக்குள் மாவட்டப் பணியிட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம், 3 ஆயிரத்து

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:11 PM
பகிர்:

சென்னை, பிப். 13: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் வெற்றி பெற்றோருக்கு இந்த மாத இறுதிக்குள் மாவட்டப் பணியிட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம், 3 ஆயிரத்து 484 பேர் கிராம நிர்வாக அலுவலர்களாக விரைவில் பணியில் சேரவுள்ளனர்.

 தமிழகத்தில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி நடந்தது. இந்தத் தேர்வினை எழுத 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் சுமார் 10 லட்சத்து 44 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அதில் 85 ஆயிரத்து 384 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

 மொத்தம் 7 லட்சத்து 76 ஆயிரத்து 156 பேர் தேர்வினை எழுதினர்.

 மொத்தம் எத்தனை இடங்கள்? பொதுப் பிரிவில் 1,576 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவு பணியிடங்கள் 1,077 என மொத்தம் 22,653 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது.

 பின்னர் பொதுப்பிரிவினருக்கான காலிப் பணியிடங்களில் 831 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 2 ஆயிரத்து 407 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

 இதையடுத்து, பொதுப் பிரிவினருக்கான காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதியும், பின்னடைவு காலியிடங்களுக்கு நடந்த தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதியும் வெளியிடப்பட்டன.

 நீதிமன்றத்தில் வழக்கு: வி.ஏ.ஓ. தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணியிட ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும். இதை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தேர்வில் முறைகேடான வழியில் வெற்றி பெற்று பணியில் சேருவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 அதன்படி, பணியிட ஒதுக்கீடு பெற்றவர்களில் யாரேனும் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரால் குற்றவாளி என கண்டறியப்பட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களின் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கான பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

 இந்த உத்தரவு கிடைத்தவுடன் வி.ஏ.ஓ.க்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கப்படும் எனவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. நீதிமன்ற உத்தரவு இந்த வார இறுதிக்குள் பெறப்பட்டு, மாவட்ட பணியிட ஒதுக்கீடு மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு விடும் என அந்த வட்டாரங்கள் கூறின.

 உத்தரவு எப்படி கிடைக்கும்? தேர்வுகள் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அவர்களுக்கு ஒரு படிவம் அளிக்கப்பட்டது. அதில், விரும்பும் மாவட்டங்களைக் குறித்துத் தரும்படி கோரப்பட்டது. அந்த விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அவர்களின் ஒப்புதலைப் பெறும் வகையில் கையெழுத்தும் வாங்கப்பட்டுள்ளது.

 மதிப்பெண்கள் மற்றும் இனவாரியாக மாவட்டங்கள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான கிராம நிர்வாக அலுவலர்கள் ஒதுக்கப்பட்டு அதன் விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன் தேர்வாணையத்தின் பணி முடிந்து விடும்.

 இதன்பின், மாவட்டத்தில் கோட்ட வாரியாக தேவைப்படும் கிராம நிர்வாக அலுவலர்களை ஆட்சியர் பிரித்துத் தருவார். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி உத்தரவை வருவாய் கோட்டாட்சியர் வழங்குவர். அதன்பின், 3 ஆயிரத்து 484 பேருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 45 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.