முகப்பு
தமிழ்நாடு

திருமண உதவித் திட்டம்: 59 ஆயிரம் பேருக்கு தங்க நாணயம்

சென்னை, பிப். 18: ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தமிழக அரசின் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 59 ஆயிரத்து 712 பேருக்கு தலா 4 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில்

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:15 PM
பகிர்:

சென்னை, பிப். 18: ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தமிழக அரசின் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 59 ஆயிரத்து 712 பேருக்கு தலா 4 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில் 1.69 லட்சம் பேருக்கு தங்க நாணயங்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமூக நலத் துறையின் சார்பில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமண உதவிக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவித் திட்டம் என பல்வேறு பெயர்களில் திருமண நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது.

தங்க நாணயம் பெற ஆர்வம்: தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தமிழக அரசு வழங்கும் 4 கிராம் தங்க நாணயத்தைப் பெற திருமண வயதை அடைந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட கடந்த மே மாதம் முதல் இதுவரை விண்ணப்பித்திருந்தவர்களில் 60 ஆயிரம் பேருக்கு தங்க நாணயம் வழங்கத் தேர்வு செய்யப்பட்டனர். இதில், பிப்ரவரி 10-ம் தேதி வரை 59 ஆயிரத்து 712 பேருக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 283 பேருக்கு விரைவில் தங்க நாணயம் வழங்கப்படும். சென்னையில் சமூக நலத்துறை இயங்கி வந்த எழிலகக் கட்டடத்தில் சமீபத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் 5 தங்க நாணயங்கள் எரிந்து நாசமாயின.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் இந்த நாணயங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அந்த நாணயங்களை வங்கி அதிகாரிகளே மாவட்ட நிர்வாகத்திடம் நேரில் வழங்குவதால், எந்தவிதமான முறைகேடுமின்றி இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

கூடுதல் பயனாளிகள்: இரண்டாம் கட்டமாக தங்க நாணயங்களை வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் வங்கிகளிடமிருந்து கோரப்பட்டு, பரிசீலனையில் உள்ளன. தேர்வாகும் வங்கிகளிடமிருந்து தங்க நாணயங்கள் பெறப்பட்டு ஓரிரு மாதங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடப்பு நிதியாண்டில் 1.69 லட்சம் பேருக்கு தங்க நாணயங்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிதி உதவி:÷2009-2010-ம் நிதியாண்டில் திருமண நிதி உதவியைப் பெற 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 427 பேருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.