முகப்பு
தமிழ்நாடு

அரியலூருக்கு இன்னமும் வராத காவல் துறை அலுவலகங்கள்

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் துறைக்கு எனப் பிரிக்கப்பட்ட பல்வேறு அலுவலகங்கள் உடனடியாகச் செயல்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைந்து இயங

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:18 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:26 PM

அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் துறைக்கு எனப் பிரிக்கப்பட்ட பல்வேறு அலுவலகங்கள் உடனடியாகச் செயல்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைந்து இயங்கி வந்த அரியலூர் மாவட்டம், முந்தைய தி.மு.க. ஆட்சியில் மீண்டும் தனியாக உருவாக்கப்பட்டது. இதையடுத்து அரியலூர் மாவட்ட காவல் துறை 2007 டிசம்பர் முதல் தனியாகச் செயல்படத் தொடங்கியது.

இருந்தாலும் மாவட்ட எஸ்.பி. அலுவலகம், தனிப் பிரிவு அலுவலகம் ஆகியவை மட்டுமே அரியலூரில் மாவட்ட காவல் துறையின் கீழ் இயங்கி வந்தன. காவல் துறையின் நிர்வாக சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள், ஊதியம் போன்றவை பெரம்பலூரிலிருந்தே பெறப்பட்டன.

Advertisement

இதையடுத்து, பல்வேறு பொது நல அமைப்புகளின் தொடர் வலியுறுத்தலால், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரியலூர் மாவட்ட காவல் துறை அலுவலகம் தனியாக இயங்குவதற்குரிய அரசாணை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் 3 முதல் அரியலூர் மாவட்ட காவல் துறை அலுவலகம் அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையிலுள்ள பல்துறை அலுவலகக் கட்டட வளாகத்தில் (முந்தைய ஆட்சியர் அலுவலகம்) இயங்கத் தொடங்கியது.

இந்தக் கட்டடத்தில் 13 பிரிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேர்முக உதவியாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு 40 பேர் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை அலுவலகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அரியலூரில் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், அரியலூர் மாவட்ட காவல் துறைக்கென தனியாகப் பிரிக்கப்பட்ட அலுவலகங்கள் பல இன்னமும் வந்து சேரவில்லை. மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் தற்போது காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நில மோசடி தடுப்புப் பிரிவு, தனிப் பிரிவு அலுவலகம், அமைச்சுப் பணியாளர் அலுவலகம் உள்ளிட்டவைதான் செயல்படுகின்றன. மற்ற அலுவலகங்களுக்கு அறைகள் தயாராக இருந்தும், அவை இன்னமும் அரியலூருக்கு வரவில்லை.

இதற்கான காரணம் தெரியவில்லை. இதனால், இன்னமும் அலுவல் தொடர்பாக பெரம்பலூர் சென்று வரக்கூடிய நிலை உள்ளது என்கின்றனர் காவல் துறையினர்.

இந்த மாவட்டத்தில் பெரிய அளவிலான குற்றங்கள் நடந்தால், சம்பவப் பகுதியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் தடயங்களைச் சேகரிக்க வேண்டும். ஆனால், அதற்கான தடயவியல் நிபுணர்கள் அரியலூர் மாவட்டத்துக்கெனத் தனியாக இல்லை. பெரம்பலூரிலிருந்தோ, திருச்சியிலிருந்தோதான் வரவழைக்க வேண்டிய நிலை இன்னமும் உள்ளது. இதே நிலையில்தான் மோப்ப நாய்ப் பிரிவும் உள்ளது என்கின்றனர் அவர்கள்.

மாறாத காவலர்களுக்கான மாவட்ட குறியீடு: போலீஸார் எந்த மாவட்டத்தில் பணியாற்றுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் வகையில், அந்த மாவட்டத்துக்கான ஆங்கில வார்த்தையின் சுருக்கத்தோடு காவலரின் பெயர்ப் பட்டைக்கு மேல் பகுதியில் காவலர் எண் தரப்படும். ஆனால், அரியலூர் மாவட்ட போலீஸார் பெரம்பலூர் மாவட்ட குறியீட்டோடுதான் பணிபுரிகிறார்கள். எனவே, அரியலூர் மாவட்ட குறியீட்டை வழங்க வேண்டும் என்பதே காவலர்களின் விருப்பமாக உள்ளது.

புதிதாக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகக் கட்டடம், காவல் கண்காணிப்பாளர் குடியிருப்பு, மாவட்ட ஆயுதப் படை வளாகம், பாய்ஸ் கிளப் போன்ற அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் - காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் வெளியிட்ட தமிழக முதல்வர், அரியலூர் மாவட்ட காவல் துறையில் தீர்க்கப்படாமல் உள்ள பல பிரச்னைகளுக்கும் உரிய தீர்வைக் காண்பார் என நம்புகிறோம் என்கின்றனர் அரியலூர் மாவட்ட காவல் துறையினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.