முகப்பு
தமிழ்நாடு

புகையைக் கக்கும் "தார்' ஆலைகள்: விழிக்குமா மாசு கட்டுப்பாட்டு வாரியம்?

ஸ்ரீபெரும்புதூர், ஜன. 31: சோமங்கலம் குன்றத்தூர் சாலையில் செயல்பட்டு வரும் தார் தொழிற்சாலைகளால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் தார்

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:03 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூர், ஜன. 31: சோமங்கலம் குன்றத்தூர் சாலையில் செயல்பட்டு வரும் தார் தொழிற்சாலைகளால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் தார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகை அருகில் உள்ள நீர்நிலைகளில் படிவதால் அவை மாசடைந்து வருகின்றன.

 காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சோமங்கலம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான 14 தார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

 இத்தொழிற்சாலைகள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முறையாக அனுமதியின்றியும், ஊராட்சி மன்றத்தின் அனுமதியின்றியும் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கட்டுப்பாடு இல்லாமல் 24 மணி நேரமும் தொழிற்சாலையை இயக்கி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 இதனால் இத்தொழிற்சாலைகளில் இருந்து 24 மணிநேரமும் வெளியேறும் கரும்புகை காற்று அடிக்கும் திசையில் செல்வதால் சோமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் சென்று படிவதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த கரும்புகையினால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சுவாசம் தொடர்பான நோயிகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

 சோமங்கலம் குன்றத்தூர் சாலையில் செயல்படும் தார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை அருகில் உள்ள சோமங்கலம் ஏரியில் படிவதால் தற்போது ஏரி நீர் முழுவதும் மாசடைந்து வருவதோடு அவ்வபோது ஏரியில் உள்ள மீன்களும் செத்து மிதக்கின்றன.

 இதனால் இந்த ஏரி நீரைப் பயன்படுத்தி சுமார் 600 ஏக்கரில் விவசாயம் செய்து வரும் சோமங்கலம், நடுவீரப்பட்டு, புதுச்சேரி ஆகிய கிராமங்களைச் சேந்த விவசாயிகள் விவசாயம் பாதிக்கப்படுமோ என அச்சமடைந்துள்ளனர்.

 இது தவிர தார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரும் புகையினால் சோமங்கலம் குன்றத்தூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சலை ஏற்படுத்தி வருவதால் அவ்வபோது விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.

 மேலும் இத்தொழிற்சாலைக்கு அருகில் உள்ள கிணற்று நீரிலும் இந்த கரும்புகையின் துவகள்கள் படிவதால் கிணற்று நீரும் மாசடைந்து வருகிறது.

 இந்த கிணற்று நீரை பயன்படுத்தித்தான் சோமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் குழாய்கள் மூலம் ஊராட்சி முழுவதும் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். இதனால் இந்த குடிநீரை பயன்படுத்துவோருக்கு தொற்றுநோய் ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

 இது குறித்து சோமங்கலம் கிராம மக்கள் கூறுகையில், இந்தத் தார் தொழிற்சாலைகள் கடந்த 5 வருடங்களாக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் மனு அளித்தும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

 மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் இத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கரும்புகையினால் நாங்கள் தான் சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம் என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →