தமிழ்நாடு

பொலிவு பெறும் ராமக்காள் ஏரி: அச்சத்தில் கால்நடை விவசாயிகள்

தருமபுரி: தருமபுரி ராமக்காள் ஏரி சீரமைக்கும் பணியால் தங்களது வாழ்வாதாரம் பறிபோகுமோ என்ற அச்சத்தில் 100-க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் தவித்து வருகின்றனர்.  இந்த ஏரி நிலம்தான் ஆயிரக்கணக்கான கால்நடை

ஆர். முருகன்

தருமபுரி: தருமபுரி ராமக்காள் ஏரி சீரமைக்கும் பணியால் தங்களது வாழ்வாதாரம் பறிபோகுமோ என்ற அச்சத்தில் 100-க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

 இந்த ஏரி நிலம்தான் ஆயிரக்கணக்கான கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக உள்ளது. தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் நகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது ராமக்காள் ஏரி.

 சுமார் 270 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியை நம்பி 3 மடை வழியாக பாசனமும் உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ள தருணங்களில் பல்வேறு வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும். மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் அன்றாட வாழ்வுக்கு இந்த ஏரியையே நம்பியே உள்ளனர்.

 இந்த ஏரியில் நகராட்சிப் பகுதியின் கழிவுநீர் கலக்கப்படுவதால் ஏரி மாசடைந்துள்ளது. எனவே, ஏரியை தூர் வாரி சீரமைத்து சுற்றுலாப் பகுதியாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

 இதற்காக மக்கள் பங்கேற்புடன் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் ஏரியில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏரிக் கரைகள் பலப்படுத்தப்பட்டு நடைபாதை பூங்கா அமைக்கப்படுகிறது. மேலும், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா, படகு இல்லம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

 ஏரியை சுற்றுலாத் தலமாக்கி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் 10 கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் கடும் அவதிக்குள்ளாக நேரிடும்.

 மாட்டுக்காரனூர், ரெட்டிஹள்ளி, சவுளுப்பட்டி, குமாரசாமிப்பேட்டை, சத்யா நகர், அண்ணா நகர், மதிகோண்பாளையம், பழைய தருமபுரி, குண்டலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆடு, மாடு வளர்ப்போர் தங்களது கால்நடைகளை இந்த ஏரிக்கு அழைத்து வந்து மாலை வரை மேயவிட்டு அழைத்துச் செல்கின்றனர். சீரமைப்புப் பணியால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

 இதுதொடர்பாக, மாட்டுக்காரனூரைச் சேர்ந்த வெங்கடேசன் (45) கூறியது: எனது குடும்பத்தின் குலத் தொழிலே ஆடு, மாடு வளர்ப்பதாகிவிட்டது. ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ராமக்காள் ஏரிக்கு அழைத்து வந்து மேய விடுகிறோம். இப்போது, ஏரியை அழகுபடுத்துவதாகக் கூறி ஆடு, மாடுகளை மேய விடாமல் செய்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். என்னைப்போல 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுவர் என்றார்.

 சவுளுப்பட்டியைச் சேர்ந்த முனியப்பன் (47) கூறியது: 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரியை நம்பித்தான் கால்நடைகளை வளர்த்து வருகிறோம். தீவன விலையேற்றத்தால் எங்களால் தீவனத்தை வாங்கி கால்நடைகளுக்கு வழங்க இயலவில்லை. ஏரியில் வளரும் புல், பூண்டு, செடிகளையே தீவனமாக உள்கொள்வதால் ஆடு, மாடுகள் செழிப்பாக வளருகின்றன.

 ஏரியில் உள்ள தண்ணீரை கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்திக் கொள்கிறோம். ஏரியை சீரமைப்பதாகக் கூறுகின்றனர். அத்தகைய நடவடிக்கை எடுத்தால் எங்களுக்கான மேய்ச்சல் பகுதியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றார்.

 மதிகோண்பாளையத்தைச் சேர்ந்த சீதா (60) கூறியது: இந்த ஏரியில் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு வந்து செல்கின்றன. திடீரென ஏரிக்குள் ஆடு, மாடுகளை கொண்டுவரக் கூடாது எனக் கூறிவிட்டால் இந்த ஆடு, மாடுகள் அனைத்தும் தண்ணீருக்கும், தீவனத்துக்கும் தவிக்க நேரிடும். இந்த ஆடு, மாடுகளை வளர்க்கும் அனைவரும் ஏழ்மை நிலையில் உள்ளோம். அதிக விலைகொடுத்து தீவனம் வாங்கித்தர முடியாது. கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் ஏரி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

 இதுதொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப் பணித் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ஏரிக் கரை மட்டும் பலப்படுத்தப்படுகிறது. ஏரியின் குறிப்பிட்ட சில பகுதி மட்டும்தான் பூங்கா மற்றும் அழகுபடுத்தும் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது. மேய்ச்சலுக்கு எந்தவிதத் தடையும் இல்லை. வழக்கம்போல பயன்படுத்திக் கொள்ளலாம். அச்சப்படத் தேவையில்லை என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT