52 ஆண்டு பாரம்பரியம்: அரசுத் துறையாகிறது கதர் வாரியம்
சென்னை, ஜூன் 16: கடந்த 52 ஆண்டுகளாக வாரியமாகச் செயல்பட்டு வந்த கதர் வாரியத்தை அரசுத் துறையாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், கதர் மற்றும் கிராமத் தொழில்களின் தயாரிப்பை ஊக்குவிக்க இணைய
சென்னை, ஜூன் 16: கடந்த 52 ஆண்டுகளாக வாரியமாகச் செயல்பட்டு வந்த கதர் வாரியத்தை அரசுத் துறையாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், கதர் மற்றும் கிராமத் தொழில்களின் தயாரிப்பை ஊக்குவிக்க இணையதளம் மூலமான விற்பனை போன்ற நவீன உத்திகளைப் புகுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் என்பது தொழில் மற்றும் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வந்தது. கதர் துறையை வளம் பெற்ற துறையாக மாற்ற எண்ணி 1960-ல் அது வாரியமாக மாற்றப்பட்டது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் சோப் போன்ற அத்தியாவசியப் பொருள்களை கதர்-கிராம தொழில்கள் வாரியம் தயாரித்தாலும் வெளிச்சந்தையில் அவற்றுக்கு பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களின் நலன் காப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்த போதிய நிதி இல்லாமல் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
ஊழியர்களைக் குறைக்கும் உத்தரவு: கதர்-கிராமத் தொழில்கள் வாரியத்தில் பெரிய அளவுக்கு பணிகள் ஏதும் இல்லாத காரணத்தால் அதில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களை வேறு அரசுத் துறைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான அனுமதி கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. இந்த உத்தரவு மூலம், 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேறு துறைகளுக்குச் செல்ல விரும்பினாலும் அவர்களுக்கு பிரச்னை எழுந்தது. புதிதாகச் சேரும் துறையிலோ, அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய கதர் வாரியத்தின் பணிக்காலம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இது தங்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட பணிக்கொடைகளில் பெரும் பாதிப்பை உருவாக்கும் என ஊழியர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
வாரியம் அரசுத் துறையாகிறது... இந்த நிலையில், கதர் வாரியத்தை அரசுத் துறையாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம், கதர் மற்றும் கிராமத் தொழில்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன் ஊழியர்களின் நலன்களையும் காக்க முடியும் என அரசுத் துறை வட்டாரங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன. அரசுத் துறையாக்குவதன் மூலம் கதர் மற்றும் கிராமத் தொழில்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையும், உற்பத்திப் பெருக்கத்துக்கான நடவடிக்கைகளும் எடுக்க வாய்ப்பு இருப்பதாக அந்தத் துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணையதளம் மூலம்... கதர் மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவிப்பதற்கான முதல் கட்டமாக, தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் செயல்படும் பூம்புகார் நிலையங்களின் விற்பனையைப் பெருக்க அரசு உத்தேசித்துள்ளது. அந்த நிலையங்களில் அனைத்து அத்தியாவசியப் பொருள்கள், பித்தளை விளக்குகள், சிலைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. பூம்புகார் விற்பனை நிலையத்துக்கான பொருள்களை இணையதளம் மூலம் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. என்னென்ன பொருள்கள் விற்பனைக்கு உள்ளன என்பது குறித்த தகவல்கள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். அந்தப் பொருள்களை "கிளிக்' செய்து அதற்கான பணத்தை இணையதள வங்கிச் சேவை அல்லது கடன் அட்டை வழியாகச் செலுத்தலாம். பொருள்கள் உங்களுடைய வீட்டுக்கே கொண்டு வந்து சேர்க்கப்படும் என துறையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.