முகப்பு
தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி. நேர்காணலில் புதிய முறை

சென்னை, ஜூன் 22: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2 போன்ற முக்கியத் தேர்வுகளின் நேர்காணல்களில் புதிய முறை புகுத்தப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளுடன் கள அனுபவம் பெற்றவர்களும

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

சென்னை, ஜூன் 22: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2 போன்ற முக்கியத் தேர்வுகளின் நேர்காணல்களில் புதிய முறை புகுத்தப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளுடன் கள அனுபவம் பெற்றவர்களும் நேர்காணலை நடத்தவுள்ளனர்.

இதன்மூலம், திறமையானவர்களை அரசுத் துறைகளில் பணியமர்த்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று எழுத்துத் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றால் அரசுப் பணி; மற்றொன்று எழுத்துத் தேர்வுடன் நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றாக வேண்டும். இரண்டாவது வகைத் தேர்வுகள் என்பது துணை ஆட்சியர், நகராட்சி ஆணையாளர் போன்ற முக்கியத் தேர்வுகளுக்குப் பொருந்தும்.

பழைய நடைமுறை என்ன? எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த நேர்முகத் தேர்வை நடத்துவோரில் சம்பந்தப்பட்ட துறையிலுள்ள உயரதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரி இருப்பர். உதாரணத்துக்கு, வேளாண்மைத் துறையில் உள்ள காலியிடங்களுக்கு பணியாளர்களை நிரப்ப வேண்டும் என்றால் அதற்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றோர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

அவர்களிடம் கேள்விகளைக் கேட்டு நேர்காணலை நடத்துவதற்காக, வேளாண்மைத் துறையில் உள்ள உயரதிகாரி மற்றும் அந்தத் துறையில் அனுபவம் பெற்றவர்கள் குறித்த பட்டியலைத் தரும்படி துறையிடம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கோரும். டி.என்.பி.எஸ்.சி. கோரிக்கையை ஏற்று வேளாண்மைத் துறையில் ஒரு உயரதிகாரியையும், அனுபவம் பெற்றவர் என்கிற முறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் அந்தத் துறை அளிக்கும்.

"ஓய்வு பெற்ற அதிகாரியை எப்படி அனுபவம் மிக்கவராக கருத முடியும்' என்று இப்போது கேள்வி எழுப்பியுள்ள டி.என்.பி.எஸ்.சி. அதற்கான மாற்றுத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

புதிய நடைமுறை: புதிய திட்டத்தின்படி, அனுபவமிக்கவர்கள் என்கிற பட்டியலில் களத்தில் பணியாற்றுவோர் வருகின்றனர். அதாவது, துறைகள் அளிக்கும் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்குப் பதிலாக சம்பந்தப்பட்ட துறையில் களப்பணியாற்றும் பிரமுகர்கள் நேர்காணலை நடத்தும் குழுவில் இடம்பெறவுள்ளனர்.

அதாவது, வேளாண்மைத் துறையில் காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் என்றால், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை போன்றவற்றில் களப்பணியாற்றும் பிரமுகர்கள் அழைக்கப்படுவர். சமூக நலத் துறை என்றால் "கில்டு ஆஃப் சர்வீஸ்' போன்ற அமைப்புகளில் இருந்து பிரமுகர்கள் வருவார்கள்.

கேள்விகள் எப்படி? களப்பணியாற்றுவோருக்கு நிச்சயம் ஒரு துறை குறித்து பரந்த அறிவினைப் பெற்று இருப்பார்கள். அவர்கள் தங்கள் அறிவினை தேர்வர்கள் மீது புகுத்தக் கூடாது எனவும் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது. நேர்காணலில் பங்கு கொள்பவர்களுக்கு ஒரு துறையைப் பற்றிய பார்வை எப்படி இருக்கிறது, அவர்களுக்கு துறை மீதான ஈர்ப்பு எப்படி போன்றவற்றை சோதிக்கும் பணியை கள அனுபவமிக்கவர்கள் மேற்கொள்வர் என தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

உங்கள் பெயரை அனுப்பலாம்: ஒரு துறையில் மிகவும் பழுத்த அனுபவம் பெற்றவர்களாக நீங்கள் இருந்தால் உங்கள் அனுபவம் பற்றிய குறிப்புகளை டி.என்.பி.எஸ்.சி.க்கு எழுதலாம். நீங்கள் தகுதியானவராக இருந்தால் தேர்வர்களிடம் நேர்காணல் நடத்தும் குழுவில் இடம்பெறும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும் என தேர்வாணைய வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.