சுனாமியைவிட "தானே'தான் பேரிழப்பு!: தங்கர் பச்சான்
புது தில்லி, மார்ச் 3: பாராட்டு விழாவுக்கும், விருது வாங்குவதற்கும் தலைநகரான தில்லிக்குத் திரைப்படத் துறையினர் வருவது வழக்கம். ஆனால், "தானே' புயலால் உருக்குலைந்து போன கடலூர் மாவட்ட மக்களுக்காக "தானே ப
புது தில்லி, மார்ச் 3: பாராட்டு விழாவுக்கும், விருது வாங்குவதற்கும் தலைநகரான தில்லிக்குத் திரைப்படத் துறையினர் வருவது வழக்கம். ஆனால், "தானே' புயலால் உருக்குலைந்து போன கடலூர் மாவட்ட மக்களுக்காக "தானே புயலின் அறுவடை' எனும் ஆவணப்படக் குறுந்தகட்டுடன் தில்லிக்கு வந்திருந்தார் தங்கர் பச்சான்.
கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் தமிழகத்தின் கடலோர மாவட்டமான கடலூரை உலுக்கிய "தானே' புயலை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது.
""இப்புயலால் கடலூரில் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தைப் பேரிடர் பகுதியாக அறிவித்து மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்'' என்று தமிழ்த் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் தலைநகரில் மத்திய அமைச்சர்களின் நடவடிக்கைக்காக "தவம்' இருந்து வருகிறார்.
"தானே'யின் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள மக்கள், அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்னை குறித்து "தினமணி'க்கு அவர் அளித்த உருக்கமான பேட்டி:
"தானே' புயலால் கடலூர் மாவட்டம் முற்றிலும் அழிவுக்கு உள்ளாகி 62 நாள்கள் ஆகிவிட்டன. அந்த மக்களின் வாழ்வாதாரப் பாதிப்பு குறித்து ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் முழுமையாக உலகுக்குத் தெரிவிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் தமிழக அரசு தனது பங்களிப்பை அதிகமாகவே செய்து வருகிறது. இதற்காகவே தனியாக ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து பல திட்டங்களையும் முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கெனவே, நிதி நெருக்கடியில் உள்ள தமிழக அரசுக்கு இத் திட்டங்களை முழுமையாகவும், உடனடியாகவும் செயல்படுத்த மத்திய அரசின் பேரிடர் பகுதிக்கான நிதி கிடைப்பது அவசியம்.
நான் எடுத்துள்ள ஆவணப்படம் மூலம் மத்திய அரசு கடலூர் மாவட்ட மக்களின் பிரச்னைகளை முற்றிலும் உணர்ந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.
சுனாமிப் பேரலையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட மத்திய அரசு பல சிறப்புத் திட்டங்களை ஏற்படுத்தியது. உலக நாடுகளும், குறிப்பாக பல தன்னார்வ
நிறுவனங்களும் பணத்தை வாரி இறைத்தன. தேவைக்கு அதிகமாகவே உதவி செய்தன. ஆனால், சுனாமிப் பாதிப்பைவிட தற்போது கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, மத்திய அரசு பாதிக்கப்பட்ட அப்பகுதியைப் பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும்.
மனித உயிர்களின் இழப்பின் அடிப்படையில்தான் மத்திய அரசு இயற்கைச் சீற்றங்களைப் பேரிடர் பகுதியாக வகைப்படுத்துகிறது. சுனாமிப் பேரலையில் உயிரிழந்தவர்களின் கதை அன்றோடு முடிந்துபோன ஒன்று. அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பும் மிகக் குறைவு. ஆனால், "தானே' புயல் ஏற்படுத்திய பாதிப்பு அப்படிப்பட்டதல்ல. பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமே போய்விட்டது. அவர்கள் தினம் தினம் செத்துப் பிழைக்கின்றனர்.
முந்திரி, பலா, தேக்கு, தென்னை, புளிய மரங்கள் எல்லாம் புயலின் கோரத் தாண்டவத்தால் அழித்தொழிக்கப்பட்டுவிட்டன. இப்புயலுக்குப் பிறகு கடலூர் மாவட்டத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் தொடுவானம் தெரிகிறது. 2 அடியில் செடி,
கொடிகள் இல்லை. ஆடு, மாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இம்மாவட்டத்தில் 95 சதவீதம் மக்கள் மரங்களை நம்பியே வாழ்ந்து வந்தனர்.
பலா, முந்திரி, தென்னை, புளிய மரங்களைப் பயிரிட்டு வளர்த்துப் பயனைப் பெற இன்னும் குறைந்தது 10 ஆண்டுகள் காத்திருந்தாக வேண்டும். அது தவிர அந்த விவசாயிகளின் நிலைமை என்ன? மீண்டும் பயிரிட அவர்களிடம் என்ன இருக்கிறது?
பணம் கொடுத்தால் மட்டுமே இந்த மரங்கள் அனைத்தையும் ஒரே நாளில் வளர்த்துவிட முடியுமா? மரக்கன்று வைத்தால் அவை உடனே வளர்ந்துவிடுமா?
2 லட்சம் ஏக்கரில் இருந்த மரங்கள் அழிந்து போயின. குறைந்தது 16 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 100 நாள் வேலைத் திட்டத்தில் மரக்கன்றுகளை நடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தில் பணியாற்றுவோர் பெண்களாகவும், முதியோர்களாகவும் உள்ளனர். தவிர, மரத்தின் வேர்கள் ஆழமாகவும், அகலமாகவும் வேரூன்றி இருப்பதால் அதை அகற்றுவதே பெரும் கடினமான பணி. இவர்களை வைத்து எப்படி முந்திரி மரத்தின் வேர்களைப் பிடுங்க முடியும்? இதற்குக் கடுமையான உழைப்புத் தேவை.
சமூகப் பொறுப்புப் பயன்பாட்டுத் திட்டத்தின் மூலம் 25 ஏக்கருக்கு ஒரு பம்பு செட் அளிப்பதன் மூலம் உரிய பலனும் கிடைக்கப் போவதில்லை. ஒரு பம்ப் செட் மூலம் நான்கைந்து ஏக்கருக்கு மேல் பாசனம் செய்ய முடியாது. மூன்று மணி நேரம் மட்டுமே மின்சாரம் என்கிற நிலையில் எப்படி பாசனம் செய்து, மரக்கன்றுகளை வளர்க்க முடியும்?
தற்போது விதை, உரம் தரப்போவதாகக் கூறுகின்றனர். தண்ணீர் இல்லாமல் அந்த விதைகளை எங்கே பயிரிடுவது?
மத்திய அரசு ஏற்கெனவே அனுப்பிய ஆய்வுக் குழுவின் கணக்கெடுப்பு சரியான பலனைத் தரவில்லை. ஆகவே, உரிய குழுவை அனுப்பி உண்மையான நிலைமையைக் கண்டறிய வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட உழவர்களின் கருத்துகளைக் கேட்டு திட்டம் தீட்ட வேண்டும்.
குறிப்பாக, மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசின் வனத்துறை செயலாற்ற வேண்டும். அப்போதுதான் இந்த மக்களுக்கு விடிவு கிடைக்கும்.
லட்சக்கணக்கான மரங்கள் அழிந்துள்ளதால் இது பற்றி காடு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் பேசினேன். அவர் நேரில் சென்று பாதிப்புப் பகுதிகளைப் பார்க்க வலியுறுத்தினேன். அழிந்த மரங்கள் மீண்டும் வளர்க்க அத்துறை மூலம் பணம் ஒதுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளேன்.
தவிர, காடு வளர்ப்பு மாநிலப் பிரச்னை மட்டுமல்ல உலகப் பிரச்னை என்பதால் உலக நாடுகளிடம் இருந்து உதவி பெறுவதன் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினேன்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது மக்களவை, மாநிலங்களவையில் "தானே' புயிலின் அறுவடை' ஆவணப்படத்தைப் போட்டுக் காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். இதற்கு ஏற்பாடு செய்வதாக மக்களவை தலைமைச் செயலர் (செகரட்டரி ஜெனரல்) விஸ்வநாதனும் உறுதியளித்துள்ளார்.
மேலும், இந்த ஆவணப் படத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் அரசுத் தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன்) ஒளிபரப்ப வேண்டுமென அத்துறையின் அமைச்சர் அம்பிகா சோனியையும் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். இந்தியாவில் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்குத் "தானே' புயலினால் ஏற்பட்டிருக்கும் அழிவுகள் பற்றிய உண்மை நிலவரத்தைப் புரிய வைக்க அதுதான் வழி. "தானே' ஏற்படுத்தி இருக்கும் சேதம் சுனாமியைவிடக் கொடுமையானது என்று தமிழகத்திலேயே பலர் புரிந்து கொள்ளாத நிலையில், தமிழகத்துக்கு வெளியே உள்ள மக்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள்?
இறுதியாக இப்பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கையும் அடுத்த வாரம் நேரில் சந்தித்துப் பேச உள்ளேன். ஏற்கெனவே புயலின் பாதிப்பு குறித்து அவருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்வரை இப்பணி தொடரும்'' என்றார் தங்கர் பச்சான்.