திருவள்ளூர், மார்ச் 14: சென்னை - திருப்பதி இடையேயான தேசிய நெடுஞ்சாலையை 4 வழிப் பாதையாக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையான எண் 7-ஐ இணைக்கும் வகையில் அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், கனகம்மாசத்திரம், திருத்தணி, நகரி, புத்தூர், ரேனிகுண்டா, திருப்பதி, கலிகிரி, மதனபள்ளி, கதிரி, பட்டணம், பட்டுல்பாலே வழியாக அனந்தபூரைச் சென்றடையும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 205 அறிவிக்கப்பட்டது.
தற்போது நாள்தோறும் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையைதான் பயன்படுத்தி வருகின்றன.
40 அடி சாலை போல் காட்சி தரும் இச்சாலை, 4 வழிப்பாதையாக மாற்றப்படும் என அப்போதைய மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சர் டிஆர்.பாலு அறிவித்தார்.
ஆனால் பாடி, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் பகுதிகளில் சாலை நெடுகிலும் ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்புகள் இருந்ததால் 4 வழிப் பாதையாக்கும் பணி தடைபட்டது.
சாலை மேம்படுத்தும் பணிக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் 4 வழிப் பாதையாக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
ஆவடி, அம்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த உள்ளாட்சிகளும் இத்திட்டத்தில் போதிய ஆர்வம் காட்டவில்லை. 40 அடி சாலையை 80 அடிச் சாலையாக அகலப்படுத்தும் திட்டமும் கைவிடப்பட்டு விட்டது.
இதனால் பாடியில் இருந்து திருநின்றவூர் வரை செல்லும் 22 கி.மீ. தூர சாலை அகலப்படுத்தும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.
திருநின்றவூரில் இருந்து திருப்பதி நகரம் வரையிலான 126 கி.மீ. தூர சாலையை 4 வழிப் பாதையாக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து நகரி வரை திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியது: "தமிழகப் பகுதியில் வேப்பம்பட்டு முதல் திருத்தணி வரையில் சாலை அமைக்கும் பணிக்குத் தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.3 மாதங்களில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கும்' எனத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.