முகப்பு
தமிழ்நாடு

அதல பாதாளத்தில் அரசு நிறுவனம்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

பல கோடி ரூபாய் புழங்கும் அரசு நிறுவனம் இப்போது அதல பாதாளத்தில்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

பல கோடி ரூபாய் புழங்கும் அரசு நிறுவனம் இப்போது அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், உடனடியாக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் தேவையை பூர்த்தி செய்யவும், அரசுத் துறைகளில் கம்ப்யூட்டர்மயமாக்கலுக்கு பெருந்துணை புரியவும் ஏற்படுத்தப்பட்டது தமிழ்நாடு  மின்னணுக் கழகம். ஆங்கிலத்தில் "எல்காட்' என அழைக்கப்படும் இந்தக் கழகம் இப்போது கலங்கி நிற்பதாக அங்குள்ள ஊழியர்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர்.

முடங்கிய ஐ.டி. பூங்கா: சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்த்து, அவற்றின் முதலீடுகளை மாநிலத்தில் பெருக்கவும், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டன.

முதல் முறையாக, சென்னையில் டைடல் பூங்கா உருவாக்கப்பட்டது. இந்தப் பூங்காவை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகமும், எல்காட் நிறுவனமும் இணைந்து  உருவாக்கியது. இப்படி உருவாக்கப்பட்ட இந்தப் பூங்கா இன்றளவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் நிலை நகரங்களான கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் ஐ.டி. பூங்காக்களை தானாகவே முன்வந்து  தொடங்கியது "எல்காட்'. இதற்கு நிலம், உள்கட்டமைப்பு என பல்வேறு தேவைகளுக்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

ஒவ்வொரு நகரத்திலும் 100 ஏக்கருக்கும் மேல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டாலும், வெறும் 50 ஆயிரம் சதுர அடி பரப்பிலே ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை அமைத்துள்ளன.

"எல்காட்' நிறுவனத்தால் அமைக்கப்பட்ட இந்தப் பூங்காக்கள் பன்னாட்டு நிறுவனங்களை பெரிய அளவுக்கு ஈர்க்கவில்லை. இதனால், வேலைவாய்ப்பையும், சர்வதேச அளவில் மிகப்பெரிய நிறுவனங்களை இங்கு கொண்டு வரவும் முடியாமல் உள்ளது. இதற்கு, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் "எல்காட்' நிறுவன அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனக் கூறப்படுகிறது.

""சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஒருபுறம் இருந்தாலும், இரண்டாம் நிலை நகரங்களிலுள்ள ஐ.டி. பூங்காக்களுக்கு சிறிய நிறுவனங்களைக்கூட அதிகாரிகளால் ஈர்க்க முடியவில்லை. இதனால், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஐ.டி. பூங்காக்காக பெறப்பட்டு அவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன'' என்று அரசுத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட முக்கிய துறைகளுடன் இணைந்து செயல்பட்டு தொழில் நிறுவனங்களை ஐ.டி. பூங்காக்களுக்கு ஈர்த்து இருக்கலாம். ஆனால், அதுபோன்ற முயற்சிகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை எனப் புகார்கள் தெரிவிக்கப்படுகிறது.

தேவையில்லாத செலவுகள் ஏன்? ஐ.டி. பூங்காக்களைத் தொடங்குவதாகக் கூறி பல  கோடி ரூபாய் முடங்கியுள்ள நிலையில், "எல்காட்' நிறுவனத்துக்குள் தேவையில்லாத செலவுகள் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக, வாகனங்கள் பயன்பாட்டைத் தெரிவிக்கிறார்கள்.

"எல்காட்' நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்கள் ஐ.டி., துறையின் அதிகாரிகள் மற்றும் அதற்குச் சம்பந்தமில்லாத அதிகாரிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், துறையின் பயன்பாட்டுக்காக வாடகை வாகனங்களை உபயோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் வாடகை மட்டும் மாதத்துக்கு ரூ.3 லட்சமாம். ஓராண்டுக்கு கணக்கிட்டுப் பார்த்தால், ரூ.36 லட்சம் வருகிறது.

இந்தப் பணத்தைக் கொண்டு சொந்தமாகவே வாகனங்களை வாங்கி விடலாம். ஆனால் அதைச் செய்யாமல் ஆண்டுதோறும் ரூ.36 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வாகனங்களின் வாடகைக்காக செலவிடப்படுகிறது. இதுபோன்ற தேவையில்லாத செலவுகள் என்ற

வகையில் ஒவ்வொரு மாதமும் கணக்கு எழுதப்படுவதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.

பொருள்கள் உரிய நேரத்தில் விநியோகம் இல்லை: அரசுத் துறைகளுக்கு கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட நவீன சாதனங்களை பெற்றுத் தரும் பணியை "எல்காட்' நிறுவனம் செய்து வருகிறது. இந்தப் பணி எல்காட்டின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும். இந்த நிலையில், அரசுத் துறைகள் கோரும் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட கருவிகளை "எல்காட்' நிறுவனம், உரிய நேரத்தில் பெற்றுத் தருவதில்லை என்கிறார்கள் பிற துறையைச் சேர்ந்த அதிகாரிகள்.

""எல்காட்டில் ஒரு பொருள் வேண்டுமெனக் கோரினால் அதன் அவசரத்தை உணர்ந்து அவர்கள் பெற்றுத் தருவதில்லை. இதனால், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களின் அதிகாரிகள், வெளி நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். இது "எல்காட்'டின் தாமதமான நடவடிக்கைகளால் அது எதற்காக உருவாக்கப்பட்டதோ அதைச் சிதைப்பதாக உள்ளதாக'' பெயர் குறிப்பிட விரும்பாத அரசுத் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எத்தனை பொறுப்புகள்? எல்காட் மேலாண் இயக்குநராக இருப்பவர் அதனுடன் மேலும் இரண்டு முக்கிய பொறுப்புகளை வகிப்பதே அலட்சியமாக இருப்பதற்குக் காரணம் என்கிறார்கள்.

எல்காட் மேலாண் இயக்குநர் பொறுப்புடன், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் முதன்மை செயல் அலுவலர், கனிம வளத்துறையின் ஆணையாளர் என மேலும் இரண்டு பொறுப்புகளை வகிக்கிறார். கூடுதல் பொறுப்புகளிலேயே அதிக கவனம் செலுத்துவதால், "எல்காட்' மீது அலட்சியம் காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

எனவே, அதலபாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் "எல்காட்' நிறுவனத்தை  உடனடியாக மீட்க முதல்வர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

துறையின் பயன்பாட்டுக்காக வாடகை வாகனங்களை உபயோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் வாடகை மட்டும் மாதத்துக்கு ரூ.3 லட்சமாம். ஓராண்டுக்கு கணக்கிட்டுப் பார்த்தால், ரூ.36 லட்சம் வருகிறது. இந்தப் பணத்தைக் கொண்டு சொந்தமாகவே வாகனங்களை வாங்கி விடலாம். ஆனால் அதைச் செய்யாமல் ஆண்டுதோறும் ரூ.36 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வாகனங்களின் வாடகைக்காக செலவிடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.