முகப்பு
தமிழ்நாடு

சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

சுங்குவார்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் கழிவுநீர்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

சுங்குவார்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் கழிவுநீர் ஆறாகச் செல்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள், பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம் திருமங்கலம், மொளச்சூர், சுங்குவார்சத்திரம் ஆகிய மூன்று ஊராட்சிகளையும் இணைக்கும் பகுதி சுங்குவார்சத்திரம் பஸ் நிலையம். இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் அதிக அளவில் இருக்கும்.

சுங்குவார்சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு சென்று வரவும், மறுமார்க்கத்தில் மேற்குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு சுங்குவார்சத்திரம் பஸ் நிலையத்தின் அருகே உள்ள பஜார் பகுதிக்கு தினமும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சுங்குவார்சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள திருமங்கலம் சாலையில் உள்ள ஹோட்டல்கள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்டவற்றில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு வாய்க்கால் வசதி இல்லாததால், சுங்குவார்சத்திரம் - காஞ்சிபுரம் சாலையில் ஆறாக ஓடுகிறது.

இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இச்சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களும், கடைகளுக்கு வரும் பொதுமக்களும், பஸ் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே சுங்குவார்சத்திரம் பஸ் நிலையத்தைத் தூய்மையாக வைத்திருக்க ஊராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இச்சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். கழிவுநீரைச் சாலையில் விடும் ஹோட்டல்கள் உள்ளிட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →