புதிய வி.ஏ.ஓ. பயிற்சிக்கான நிதியைப் பயன்படுத்தாத அதிகாரிகள்
தமிழகம் முழுவதும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட
தமிழகம் முழுவதும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி சரிவர பயன்படுத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிலஅளவை மற்றும் கிராம நிர்வாகப் பயிற்சி வகுப்புகளை நடத்தும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்தப் பயிற்சி திட்டத்தை 2 மாதங்களுக்கு மேலாக நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு மாதம் நில அளவைப் பயிற்சியும், அடுத்த மாதம் கிராம நிர்வாகப் பயிற்சி என இரண்டு வகையாகப் பிரித்து வி.ஏ.ஓ.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு வருகைப் பதிவேடும் தனியாகப் பராமரிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் (சென்னையை தவிர்த்து) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 ஆயிரத்து 615 வி.ஏ.ஓ.க்களுக்கு 118 பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ரூ.1 கோடிக்கும் கூடுதல் நிதி: நில அளவைப் பயிற்சியை நில அளவை துணை ஆய்வாளர், சார் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்துகின்றனர். கிராம நிர்வாகப் பயிற்சியை துணை வட்டாட்சியர்கள் மேற்கொள்கின்றனர். இந்த பயிற்சிக்காக அவர்களுக்கான மதிப்பூதியமாக ரூ.5 லட்சம் வரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வி.ஏ.ஓ.க்கள் அரசு வேலை நாள்களில் மட்டுமல்லாது, சனிக்கிழமை போன்ற விடுமுறை நாள்களிலும் பயிற்சிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பயிற்சியின்போது வி.ஏ.ஓ.க்களுக்கு டீ மற்றும் பிஸ்கட் போன்ற தின்பண்டங்கள் கொடுப்பதற்காக 60 நாள்களுக்கும் சேர்த்து ரூ.55.38 லட்சமும், எழுதுபொருள்கள் வாங்குவதற்காக ரூ. 2.30 லட்சம் என மொத்தம் ரூ.57.68 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த வகையில் மதிப்பூதியம் மற்றும் டி, பிஸ்கட் செலவினங்களுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நிதி, உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
தினமும் டீ மற்றும் தின்பண்டங்களை அளிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டிருந்தாலும் அதை மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் புகாரை பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி பெற்று வரும் பெரும்பாலான வி.ஏ.ஓ.க்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் பயிற்சி அளிக்க வரும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்துக்கான நிதி உரிய முறையில் பிரிக்கப்பட்டு அவை உடனுக்குடன் அவர்களுக்கு அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் காலை முதல் மாலை வரை பயிற்சி பெறும் புதிய வி.ஏ.ஓ.க்களுக்கு டீ, பிஸ்கட், எழுதுப் பொருள்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி மட்டும் பல்வேறு மாவட்டங்களில் பயன்படுத்தப்படாமல் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது முடங்கியுள்ளதா அல்லது வேறு வகையில் திருப்பி விடப்பட்டுள்ளதா என்பதை வருவாய்த் துறை உடனடியாக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.