முகப்பு
தமிழ்நாடு

புதுக்கோட்டை நகராட்சிக்கு சிறப்பு நிலை அந்தஸ்து கிடைக்காததால் மக்கள் ஏமாற்றம்

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புதுக்கோட்டை நகராட்சி சிறப்பு நிலை அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்படாததால் புதுக்கோட்டை மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Updated On : 13 ஏப்ரல், 2013 at 3:07 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:46 PM

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புதுக்கோட்டை நகராட்சி சிறப்பு நிலை அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்படாததால் புதுக்கோட்டை மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா காரைக்குடி மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் தேர்வு நிலையில் இருந்து சிறப்பு நிலை நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என புதன்கிழமை அறிவித்தார். இதில், புதுக்கோட்டை நகராட்சி இடம் பெறாததால் நகர மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்தில் தனி சமஸ்தான அந்தஸ்துடன் திகழ்ந்த பெருமையுடையது புதுக்கோட்டை.

Advertisement

1949-ல் இரண்டாம் நிலை, 1963-ல் முதல் நிலை, 1988-ல் தேர்வு நிலை எனப் படிப்படியாக நகராட்சியின் தரம் உயர்ந்தது.

தற்போது நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 42ஆக உள்ளது. இந்நிலையில், நகராட்சியின் ஆண்டு வருவாய் ரூ.10 கோடியும், ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் தொகையும் இருந்தால் அந்த நகராட்சியை சிறப்பு நிலைக்கு உயர்த்தலாம் என்பது அரசின் கொள்கை முடிவு என்ற நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே புதுக்கோட்டை நகராட்சியின் ஆண்டு வருவாய் ரூ.10 கோடியாகவும், வரவு, செலவுத் திட்டம் ரூ. 16 கோடியாகவும், மக்கள்தொகை ஏறத்தாழ 2 லட்சத்துக்கு மேலாகவும் அதிகரித்தது.

இன்னும் சிறப்புநிலை அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்படாதது ஏன் என்ற கேள்வி புதுக்கோட்டை மக்கள் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

சிறப்பு நிலை தகுதி நிலைக்கு உயர்ந்தால் மொத்த நிதி ஒதுக்கீட்டில் 20% அதிகரிக்கும், குடிநீர், சாலைகள், தெருவிளக்குகள் ஆகிய பிரிவுகளுக்கு தற்போதுள்ள ஓவர்சீயர் பதவி தகுதி, உதவி பொறியாளர் நிலையில் தனி பதவியிடங்கள் கிடைக்கும், நகராட்சி ஆணையர் தகுதி, கோட்டாட்சியர் பதவி தகுதியில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் தகுதிக்கு உயரும், இதனால் அனுபவமிக்க மூத்த அதிகாரிகள் மட்டுமே இப்பதவிக்கு வர முடியும், அலுவலர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை உயரும்.

மேலும் ரூ. 30 கோடி வரையிலான திட்டங்களை நகராட்சி நிர்வாகமே சுயமாக மேற்கொள்வது, மத்திய அரசின் நிதி, கூடுதல் மானியங்கள் போன்ற நன்மைகள் கிடைக்கும்.

இது குறித்து நகர்மன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜி. ஆறுமுகம் கூறியது: புதுக்கோட்டை நகராட்சியை சிறப்பு நிலைக்கு உயர்த்த வேண்டும் என கடந்த 2005-ல் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதே கால கட்டத்தில் திண்டுக்கல், உதகமண்டலம், கரூர் ஆகிய நகராட்சிகள் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றன.

ஆனால், புதுக்கோட்டை நகராட்சி மட்டும் தரம் உயரவில்லை. இது தொடர்பாக கடந்த ஆட்சியில் நகர்மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் நகராட்சி நிர்வாக ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது நூற்றாண்டு விழாவை நகராட்சி காணும் வேளையில் சிறப்பு நிதி ரூ. 50 கோடியை ஒதுக்கிய தமிழக அரசு நகராட்சியை சிறப்பு நிலைக்கு தரம் உயர்த்தாதது ஏமாற்றமளிக்கிறது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலர் த. செங்கோடன் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளுமே ஆளும் கட்சியின் வசம் உள்ளது. அமைச்சர் உள்பட 6 பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருக்கின்றனர். புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகமும் ஆளும் கட்சி வசம் இருக்கும்போது, புதுக்கோட்டை நகராட்சியை சிறப்பு நிலைக்கு தரம் உயர்த்துவது என்பது மிகச்சாதாரண விஷயம். இது நிறைவேறவில்லை என்பது வேதனைக்குரியது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.