தேவையற்ற பணி நியமனங்கள், நிதி முறைகேடுகள்: நெருக்கடியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தேவையற்றப் பணி நியமனங்கள், கூடுதலான அனுமதிச் சேர்க்கை மற்றும் பல்வேறு நிதி முறைகேடுகளால் நெருக்கடியில் சிக்கிய பாரம்பரியமிக்க
தேவையற்றப் பணி நியமனங்கள், கூடுதலான அனுமதிச் சேர்க்கை மற்றும் பல்வேறு நிதி முறைகேடுகளால் நெருக்கடியில் சிக்கிய பாரம்பரியமிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மிகவும் பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தமிழுக்காகவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் அண்ணாமலைச் செட்டியாரால் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டு ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 1929இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழக ஆளுநர் உள்ளார். தற்போது 80 ஆண்டுகளைக் கடந்து 10 புலங்கள், 50 துறைகள் அடங்கிய பல்கலைக்கழகமாகச் செயல்படுகிறது.
நேரடியாக 390 படிப்புகளில் மாணவ, மாணவிகள் 33,738 பேர் பயிலுகின்றனர். தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் பேர் பயிலுகின்றனர்.
ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாருக்குப் பிறகு, அவரது மகன் ராஜா சர் முத்தையா செட்டியார் 2-ஆவது இணைவேந்தராக பொறுப்பேற்று மருத்துவம், பல் மருத்துவம், தொலைநிலைக் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைத் தொடங்கினார்.
அதன் பின்னர் இணைவேந்தராக எம்.ஏ.எம்.ராமசாமி நியமிக்கப்பட்டார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் அமைச்சர்கள் க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரம், தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழ் தேசிய இயக்க நிர்வாகி பழ.நெடுமாறன், இயக்குநர் கே.பாலசந்தர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இப்பல்கலைக்கழகத்தில் இருந்து உருவானவர்கள்.
மத்திய நிதியமைச்சராக இருந்த ஆர்.கே.சண்முகம் செட்டி, சர் சி.பி.ராமசாமி ஐயர் உள்ளிட்ட பிரபலமானவர்கள், கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் இப்பல்கலைக்கழகத்தை தலைசிறந்த கல்விக்கூடமாக உருவாக்கியவர்கள்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாதாரண மக்களிடமிருந்தும் சமுதாயத்தின் அடித்தளத்தில் வாழ்பவர்களிடமிருந்தும் பெருந்தலைவர்களை உருவாக்கியிருக்கிறது என முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு கொண்ட தலைவர்களை உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் என்று நாட்டிலேயே குறிப்பிடத்தக்கவை காசி இந்து பல்கலைக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும்தான் என முன்னாள் முதல்வர் காமராஜர் தெரிவித்துள்ளார்.
இச்சிறப்பு வாய்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தற்போது நிதி நெருக்கடியால் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் சிக்கி தவிக்கிறது. அனைத்துப் புலங்களும், துறைகளும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இச்சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தேவையற்ற பணியிடங்கள் உருவாக்கப்பட்டதால் இந்த நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக பல்கலைக்கழக வருவாயின் 90 சதவீதம் ஊதியத்துக்கும், 10 சதவீதம் நிர்வாகச் செலவுக்கும் செலவிடப்படுகிறது என பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்கலைக்கழக நிர்வாகம் ஊழியர் குறைப்பு, ஊதியம் குறைப்பு குறித்து நடவடிக்கை மேற்கொள்ள முயன்றபோது நிதி நெருக்கடிக்கு நிர்வாகம்தான் காரணம், நாங்கள் அல்ல என ஆசிரியர், ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொடர் போராட்டங்களில் குதித்தனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
பல்கலைக்கழக ஆசிரியர் - ஊழியர் கூட்டமைப்புப் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை அளித்தது.
இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ் மீனாவை கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி தமிழக அரசு நியமனம் செய்து அவர் உடனடியாக பொறுப்பேற்றார். அவருக்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பில் தஞ்சை குருங்குளம் சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி கிருஸ்துராஜ் ஆகிய இருவரை தமிழக அரசு நியமனம் செய்தது.
இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனை பணி இடைநீக்கம் செய்து தமிழக ஆளுநர் கே.ரோசய்யா ஏப்ரல் 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையே "அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தராக உயர்கல்வித் துறை அமைச்சரை நியமிக்க வேண்டும். நிதிமுறைகேடுகள் குறித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 12500 ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் - ஊழியர் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி, நீலகிரி மாவட்டங்களை தவிர தமிழகத்தில் 30 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதன் விளைவாக தமிழக அரசு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர மசோதா தாக்கல் செய்து, பல்கலைக்கழகத்துக்கு இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்தது.
இது குறித்து பல்கலைக்கழக முன்னாள் அரசியல் அறிவியல் துறைத் தலைவரும், மக்கள் சக்தி இயக்கத் தலைவருமான பேராசிரியர் ஏ.சண்முகம் தெரிவித்தது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் 9,800 ஆயிரம் பேரும், ஆசிரியர்கள் 3600 பேரும் பணியாற்றுகின்றனர். அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியிடம்- 657, ஊழியர்கள் அனுமதிக்கப்பட்ட பணியிடம்-1110 பேர்.
1767 ஊழியர்கள் இருந்தால் போதும் என்ற நிலையில் உள்ள இப்பல்கலைக்கழகத்தில் பணம் பெற்றுக்கொண்டு கடந்த பல ஆண்டுகளாக தனிஅதிகாரி, தொடர்பு அதிகாரி, விரிவுரையாளர், இளநிலை உதவியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் அளவுக்கு அதிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளன.
ஆசிரியர், ஊழியர், நியமனங்கள் அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளை மீறி நியமனம் செய்யப்பட்டுள்ளது. மாதம் ரூ.48 கோடி ஊதியத்துக்கே செலவாகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றால் தரம் வாய்ந்த படிப்பு என்ற நிலை ஒருகாலத்தில் இருந்து வந்தது. தற்போது தகுதி அடிப்படையில்லாமல், நன்கொடை பெற்று அனுமதிச் சேர்க்கை, தேர்வில் மதிப்பெண்கள் பெற பணம் என கல்வி முற்றிலுமாக வியாபாரமாக மாறி பல்கலைக்கழகம் பல்வேறு "புரோக்கர்'களின் கையில் சிக்கியது.
இதனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றால் தரம் கிடையாது, வேலை கிடைக்காது என்ற நிலை உருவாகியதால் உள்ளூரில் வசிப்பவர்கள்கூட தங்களது குழந்தைகளை வெளியே படிக்க வைக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
எனவே தற்போது பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின்கீழ் தமிழக அரசு கொண்டு வந்துள்ளதை வரவேற்று மகிழ்ச்சியடைகிறோம்.
தரமானக் கல்வியை அளிக்கவும், அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் ஒருங்கிணைந்தே உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக மாற்றி நல்ல முறையில் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவும் தமிழக முதல்வர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் பேராசிரியர் ஏ.சண்முகம்.