வேளாண்மைத் துறையைச் சீரமைக்க 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு
தமிழகத்தில் தரமான உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனையை உறுதி செய்யும் வகையில்,
தமிழகத்தில் தரமான உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனையை உறுதி செய்யும் வகையில், வேளாண்மைத் துறையைச் சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக வேளாண்மைத் துறை ஆணையாளர் தலைமையில் ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேளாண்மைத் துறை மறுசீரமைப்பு என்ற பெயரில் கடந்த திமுக ஆட்சியின் போது 2007-ஆம் ஆண்டு ஒரு உத்தரவு வெளியிடப்பட்டது. அதன்படி, வேளாண் துறை மறுசீரமைக்கப்பட்டது. துறையின் உயிர் நாடியாக கருதப்பட்டு தனி அமைப்பாக இயங்கி வந்த ஆராய்ச்சிப் பிரிவானது, துறையுடன் இணைக்கப்பட்டது. மேலும், மாவட்டங்களில் உரம், பூச்சிக் கொல்லிகள் போன்றவை தரமாகக் கிடைக்க வழி வகை செய்ய மூன்று அடுக்கு அதிகாரிகளைக் கொண்ட அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதுவும் மறுசீரமைப்பால் இரண்டு அடுக்கு அமைப்பாக மாறியது.
இதனால், தாலுகா, வட்டாரம் மற்றும் மாவட்ட அதிகாரி என்ற மூன்று அமைப்பாக இருந்த காலத்தில் வேளாண்மைத் துறையில் இருந்து தரமான உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு உரிய முறையில் சான்றுகள் வழங்கப்பட்டன. ஆனால், இரண்டு அடுக்கு முறையாக மாற்றப்பட்டதால் உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை பரிசோதிப்பவரும், அதற்குச் சான்றுகள் வழங்குபவரும் ஒரே அதிகாரி என்ற நிலையாக மாறியது.
தலைமை அதிகாரி என்ற நிலையில் யாரும் இல்லாமல் இருந்து வருகிறது.
தரமற்ற இடுபொருள்கள்: வேளா ண்மைத் துறை மறுசீரமைப்பால் தரமற்ற உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், வேளாண் வேதியியல் பிரிவில் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேர்வு டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடைபெற்றது. இந்த முறையும் மறுசீரமைப்பில் காணாமல் போனது.
பழங்கள், காய்கனிகள் உற்பத்தியைப் பெருக்கும் துறையான தோட்டக் கலை துறையைச் சேர்ந்த அதிகாரிகள், வேளாண்மைத் துறையின் முக்கிய பொறுப்புகள் அமர்த்தப்பட்டனர். குறிப்பாக, உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு சான்றுகள் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.
இதனால், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தரமற்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், துறையில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றத்தைச் சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
5 பேர் அடங்கிய குழு: மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறை ஆணையாளர் சிவதாஸ் மீனா, கூடுதல் இயக்குநர் ஹனிஸ் சாப்ரா, தோட்டக்கலைத் துறை ஆணையாளர் சந்தோஷ் பாபு, வேளாண்மைத் துறை இணைச் செயலாளர் வாசுகி உள்ளிட்ட 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு துறையில் நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உள்பட அனைத்து சீரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக வேளாண்மைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.