முகப்பு
தமிழ்நாடு

களக்காடு அருகே  பாசன குளத்தில் முறைகேடாக மண் எடுப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே பாசன குளத்திலிருந்து முறைகேடாக மண் எடுப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முறைகேடாக மண் எடுக்கப்பட்டு வரும் குளத்தை ஆட்சியர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:36 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே பாசன குளத்திலிருந்து முறைகேடாக மண் எடுப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முறைகேடாக மண் எடுக்கப்பட்டு வரும் குளத்தை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

களக்காடு அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள செங்களாக்குறி்ச்சி பெரியகுளத்தில் இருந்து மண்பாண்டம் தொழில் செய்வதற்காக களக்காடு அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மு. ஆறுமுகநயினார் என்பவருக்கு 2 மாதங்களுக்கு 60 யூனிட் மண் எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

தினமும் 1 யூனிட் அளவுக்கு இயந்திரத்தை பயன்படுத்தாமல் மண்வெட்டி மூலமாக மட்டுமே மண் எடுக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட நபரைத் தவிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த திமுக முக்கிய பிரமுகர் ஒருவர் தினமும் ஏராளமான டாரஸ் லாரிகளில் குளத்தில் இருந்து மணல், செம்மண் ஆகியவற்றை அதி்க ஆழத்திற்கு அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக முறைகேடாக இயந்திரங்களைக் கொண்டு எடுத்து நாகர்கோவில், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஓடு, செங்கல் தயாரிக்கும் தொழில்சாலைகளுக்கு அதிக விலைக்கு விநியோகம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. குளத்தில் இருந்து முறைகேடாக மண் எடுப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவி்த்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், சேரன்மகாதேவி கோட்டாட்சியரிடம் விவசாயிகள், பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை செங்களாக்குறிச்சி குளத்தில் இருந்து அளவுக்கு அதிகமாக மண் எடுத்துச் சென்ற லாரி அதிவேகமாக சென்றதால் திருக்குறுங்குடி பாலம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் மணல் லாரிகளால் சாலைகள் சேதமடைவதுடன் மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளதாகவும், விபத்தில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து உள்ளதாகக் கூறி திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

மண்பாண்டத் தொழிலுக்கு என அரசிடம் அனுமதி பெற்றுவிட்டு விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் முறைகேடாக இயந்திரங்களைக் கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல், செம்மண் ஆகியவை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதால் இப்பகுதியில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.  முறைகேடாக மண் எடுக்கப்படும் குளத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு குளத்தில் இருந்து மண் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி. பெரும்படையார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.