முகப்பு
தமிழ்நாடு

இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிப் பகுதியில், இருளர்கள் வாழும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்கின்றனர்.

Updated On : 5 பிப்ரவரி, 2014 at 4:21 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:49 AM

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிப் பகுதியில், இருளர்கள் வாழும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்கின்றனர்.

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிப் பகுதியின் 3-வது வார்டு மலைநகர். அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அருகில் இந்நகர் அமைந்துள்ளது.

இங்கு 40 இருளர் குடும்பத்தினர் 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

Advertisement

இங்கு வாழும் இருளர் இன மக்களுக்காக தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் தொகுப்பு வீடுகளைக் கட்டித் தந்தது.

இவற்றை பேரூராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், மேற்கூரையின் கம்பிகள் வெளியில் தெரியும் அளவில் தற்போது சேதமடைந்துள்ளது.

மழைநீர் வீட்டின் உள்ளே ஒழுகும் நிலை இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கட்டடத்தின் பக்கச்சுவர்கள் விரிசல் விட்டு இருப்பதால், எந்த நேரத்திலும் கட்டடம் இடிந்து விழும் நிலை உள்ளது.

40-ல் 6 பேருக்கு மட்டுமே... இங்கு வாழும் 40 குடும்பங்களில், 6 குடும்பங்களுக்கு மட்டும் ரேஷன் கார்டுகள் உள்ளன. அதன் மூலம் ரேஷன் கடையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்குகின்றனர். மற்ற 34 குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுகள் இல்லை. அதனால் அம்மக்கள் வெளி மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து அரிசி உள்ளிட்ட பொருள்களை வாங்குகின்றனர். ÷அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் போன்ற பொருள்களையும் அந்த 34 பேர் பெறவில்லை.

மின்வசதி இல்லை: இத்தகைய பொருள்களை 6 குடும்பங்களும் அனுபவிக்கமுடியவில்லை. ஏனென்றால், அதை இயக்க உரிய மின்வசதி இல்லை.

இங்குள்ள குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்று, ரேஷன்கார்டு போன்றவற்றை பள்ளி நிர்வாகம் கேட்பதால், இந்த குழந்தைகளால் படிக்க முடியவில்லை. ஜாதி சான்றிதழைப் பெற மதுராந்தகம் தாலுக்கா அலுவலகத்துக்கு வந்தால், அங்குள்ள அதிகாரிகள் இவர்களை அலைக்கழிப்பதாக புகார் கூறுகின்றனர். எனவே குறிப்பிட்ட காலத்துக்குள் சான்றிதழை பெற முடியவில்லை.

இங்குள்ள அனைத்து வீடுகளிலும் மின்வசதி இல்லாததாலும், எந்த நேரத்தில் கட்டட மேற்கூரை இடிந்து விழுமோ என்ற பயத்தில் அப்பகுதி மக்கள் காலம் தாழ்த்துகின்றனர். ÷கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, சுப்பிரமணியன் என்பவரது 8 மாத குழந்தையை விஷப்பாம்பு கடித்ததால் குழந்தை இறந்தது.

இம்மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அச்சிறுப்பாக்கம் ஒன்றியக் குழுவினர், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மதுராந்தகம் கோட்டாட்சியர் பழனியம்மாள் கூறியது: "அச்சிறுப்பாக்கம் மலைநகர் பகுதி மக்களுக்கு ஜாதி சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் எதுவும் என்னிடம் இல்லை.

மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்த விண்ணப்பங்கள் இருந்தால் விசாரணை செய்து ஓரிரு நாளில் அவர்களுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படும்' என்றார்.

இது குறித்து அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் எம். கேசவனிடம் கேட்டதற்கு, "அச்சிறுப்பாக்கம் ரயில்நிலையம் அருகே உள்ள 3-வது வார்டு, மலைநகர் இருளர் இனமக்களின் தொகுப்பு வீடுகளை சீரமைக்க உரிய நிதியை ஒதுக்கி தருமாறு கேட்டுள்ளோம். எம்.எல்.ஏ, எம்.பி. போன்றோர்களின் நிதி வந்தாலும் உடனடியாக அவர்களின் வீடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்பகுதியில் சாலை வசதி, மின்விளக்கு வசதி போன்றவை தற்சமயம் அளித்துள்ளோம்' என்றார் அவர்.

சுதந்திர இந்தியாவில், இருளர் இன மக்களும் தங்களது வாழ்வில், ஒரு விடியல் பிறக்காதா? என ஏங்குகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.