பாசனத்திற்கு பாபநாசம் அணைத் திறப்பு:18,090 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் தாமிரவருணி பாசனத்தில் 18,090 ஏக்கர் நிலங்கள்
கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் தாமிரவருணி பாசனத்தில் 18,090 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அமைச்சர் பூ. செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி வெள்ளிக்கிழமை பாபநாசம் அணையில் இருந்து ஆட்சியர் மு. கருணாகரன் முன்னிலையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பூ. செந்தூர்பாண்டியன் தண்ணீர் திறந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விவசாயகளின் கோரிக்கையை ஏற்று கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தாமிரவருணி பாசனத்தில் வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய் ஆகிய 4 கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் 18.090 ஏக்கர் நிலங்களுக்கு முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை 700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழையின் மூலம் அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைகளின் நீர் இருப்பு, விவசாயத் தேவையை கருத்தில் கொண்டு அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்களுக்கு முழுமையாக பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விடப்படும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி பாசனம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், எம்.பி. க்கள் எஸ். முத்துக்கருப்பன் எம்.பி, விஜிலாசத்யானந்த், வசந்திமுருகேசன், மேயர் (பொ) பூ. ஜெகநாதன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வி. நட்டார், செயற்பொறியாளர் மா. முத்துபாண்டியன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பா. நாராயணபெருமாள், உதவி பொறியாளர் மாயன்முருகன், மின்வாரிய செயற்பொறியாளர் வி. ஸ்ரீதர், உதவி செயற்பொறியாளர்கள் எஸ். பாலசுப்பிரமணியன், டி.எம். டேவிட், வேளாண்துறை இணை இயக்குநர் சந்திரசேகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இ. ராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் க. மாரியப்பன், வி.கே. புரம் நகராட்சித் தலைவர் இ. மனோன்மணி, துணைத் தலைவர் தி. கணேசபெருமாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பரமசிவஐயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.