முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே கோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: 9 பேர் படுகாயம்: 5 பேர் கைது

விருதுநகர் அருகே கோயில் திருவிழாவில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:06 AM

விருதுநகர் அருகே கோயில் திருவிழாவில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 26 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 5 பேரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

     விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ளது குமாரலிங்காபுரம் வள்ளியூர்.   இக்கிராமத்தில் ஒரு தரப்பினருக்கு சொந்தமான காளியம்மன் திருக்கோயிலில் கடந்த 2 நாள்களாக திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் மற்றொரு தரப்பினர் திருவிழா முடிந்த நிலையில் மறுபூஜை செய்து மஞ்சப்பால் ஊத்துவதற்காக ஒரு தரப்பினருக்கு சொந்தமான காளியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்றார்களாம். அப்போது, கோயில் பூட்டப்பட்டிருந்தது கண்டு ஆத்திரம் அடைந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் சரமரியாக கல்வீசி தாக்கினார்கள்.

     இதில், காளியம்மன் கோயில் தரப்பைச் சேர்ந்த சரவணக்குமார், மேற்குத் தெரு அழகர்சாமி(40), பாலசுப்பிரமணி(47), ராதாகிருஷ்ணன்(44), எம்.ரத்தினவேல்(43), சௌந்தரவள்ளி(38), சீனிவாசன்(47), விஜயராணி(48), கார்த்திகைசெல்வம்(17) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கல்வீச்சு சம்பவத்தில் வீடுகள் மற்றும் திருவிழா பந்தல்கள் ஆகியவைகள் அனைத்தும் சேதமடைந்தன. இந்நிலையில் காளியம்மன் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகாசி-விருதுநகர் சாலையில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் பஸ் மறியயிலில் ஈடுபட்டனர்.

Advertisement

     அதன் பின்னர் தகவலறிந்த அறிந்த ஆமத்தூர் போலீஸார் மற்றும் விருதுநகர் வட்டாட்சியர் சிவஜோதி, துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் விரைந்து வந்தனர். அங்கு பஸ்மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, எங்களுக்கு பாத்தியப்பட்ட கோயிலுக்குள் யாரும் இல்லாத நேரத்தில் சென்றது இல்லாமல் கல்வீசியும் தாக்கியதோடு வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். அதனால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். உறுதியாக சம்பவத்திற்கு காரணமாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதையடுத்து, இங்கு மேலும் பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    இது தொடர்பாக காளியம்மன் கோயில் தரப்பைச் சேர்ந்த சரவணக்குமார் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மற்றொரு தரப்பினரைச் சேர்ந்த மெடார் என்ற மொக்கையன், வண்டியழகு, தலமலை, உப்பு வியாபாரி மொக்கையன், பரமசிவன் உள்ளிட்ட 26 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், கிழக்குத் தெரு கோட்டைமலை(40), கருப்பசாமி(40), ஆண்டி(24), இருளாண்டி(35), குருவன்(45) ஆகிய 5 பேரை கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.