முகப்பு
தமிழ்நாடு

கரூரில் நிதிநிறுவனத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பல லட்சம் மோசடி

கரூரில் நிதிநிறுவனத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக பல லட்சம் மோசடி செய்த நிதிநிறுவன அதிபர் உள்பட மூன்று பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Updated On : 17 ஜூன், 2014 at 7:13 PM
பகிர்:

கரூரில் நிதிநிறுவனத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக பல லட்சம் மோசடி செய்த நிதிநிறுவன அதிபர் உள்பட மூன்று பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

கரூர் மாவட்டம் நாகம்பள்ளியைச் சேர்ந்தவர் நல்லசிவம் (42). இவர் கரூர் சீனிவாசபுரத்தில் பேசன் இன்வெஸ்ட்மென்ட் என்ற பெயரில் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இங்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால், முதிர்வு காலத்திóல் இருமடங்காக ரூ.2 லட்சம் கிடைக்கும் எனக் கூறி ஏராளமானோரிடம் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு முதல் இவர் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக டெபாசிட் முதிர்வடைந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இந்நிலையில் இவர்களிடம் ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்து ஏமாறிய கரூர் காந்திகிராமத்தைச் சேர்ந்த சிலம்பண்ணன் என்பவர், கரூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில், நல்லசிவம் தன்னிடம் டெபாசிட் செய்தால் பணம் இரட்டித்து தருவதாக கூறி மோசடி செய்துவிட்டார்.

Advertisement

எனவே அவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த நல்லசிவத்தின் மனைவி ராஜாமணி(30), மாமனார் ராஜூ(60), மைத்துனர் ஓம்பிரகாஷ்(28) ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார். இதையடுத்து காவல் ஆய்வாளர் காட்வேல்ஜெகதீஷ்குமார் மற்றும் போலீஸார் கிராமநிர்வாக அலுவலர் செந்தில்நாதன் முன்னிலையில் நிதிநிறுவனத்திற்குள் செவ்வாய்க்கிழமை நிதிநிறுவனத்தின் ஷர்ட்டரை உடைத்து உள்ளே புகுந்து அங்குள்ள தஸ்தாவேஜ்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிலம்பண்ணன் கூறுகையில், முதன்முதலாக பணத்தை வாங்கும்போது யாரும் சந்தேகப்படாத அளவிற்கு சரியாக கொடுத்து வந்தார். இதனால் குறைந்த பணத்திற்கு வட்டி அதிகமாக கிடைக்கிறதே என்ற ஆசையில் ஏராளமானோர் முதலீடு செய்தனர். இப்படி அவர்கள் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றார்.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் காட்வேல்ஜெகதீஷ்குமார் கூறுகையில், நல்லசிவம் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை 5 பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். இவர்களின் புகாரின்பேரில் நல்லசிவத்தின் மாமனார் ராஜூவை மட்டும் கைது செய்துள்ளோம். மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடி வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.