பட்ஜெட் விமானங்கள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்க அனுமதி
தமிழகத்திலிருந்து மலேசியா செல்லும் விமானங்கள் அனைத்தும் மே 9-ஆம் தேதி முதல் கோலாலம்பூர் முதன்மை முனையத்துக்கு இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகளுக்கு பணம், காலம், அலைச்சல் ஆகியன மிச்சமாவதுடன், நவீன வசதிகள் பலவற்றையும் பெற முடிகிறது.
தமிழகத்திலிருந்து மலேசியா செல்லும் விமானங்கள் அனைத்தும் மே 9-ஆம் தேதி முதல் கோலாலம்பூர் முதன்மை முனையத்துக்கு இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகளுக்கு பணம், காலம், அலைச்சல் ஆகியன மிச்சமாவதுடன், நவீன வசதிகள் பலவற்றையும் பெற முடிகிறது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை, திருச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களிலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.
திருச்சியிலிருந்து ஏர்-ஏசியா, ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ், மலிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் நேரடியாகவும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் மாற்று விமானங்கள் மூலமாகவும் போக்குவரத்துகளை நடத்தி வருகின்றன.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இரு விமான நிலையங்கள் உள்ளன. அதில் முதலாவது பன்னாட்டு விமான நிலையம், இரண்டாவது குறைந்த கட்டண விமானங்களுக்கான முனையம் (எல்சிசிடி- லோ காஸ்ட் கேரியர் டெர்மினல்). இது முதன்மை முனையத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இதில் இந்தியா உள்ளிட்ட மேலும் பல நாடுகளிலிருந்து இயக்கப்படும் குறைந்த கட்டண விமானங்கள் வந்து செல்லும். திருச்சி, சென்னை, மதுரை, திருவனந்தபுரம் உள்ளிட்ட விமான நிலையங்களிலிருந்து குறைந்த கட்டண பட்ஜெட் விமானங்களில் மலேசியா செல்வோர், கோலாலம்பூர் முதன்மை பன்னாட்டு விமான நிலையத்துக்குச் செல்ல முடிவதில்லை.
நகர்ப் பகுதியை விட்டு சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள எல்சிசிடி விமான நிலையத்துக்கு செல்கின்றனர். அங்கிருந்து சுமார் 1 மணி நேரம் சாலை வழியாக பயணித்து கோலாலம்பூரை அடையவேண்டியிருந்தது. இதனால் பயணிகளுக்கு தேவையற்ற அலைச்சல், செலவு ஏற்பட்டு வந்தது.
குறிப்பாக, மாற்று விமானம் மூலம் மலேசியாவிலிருந்து வேறு நாடுகளுக்குச் செல்வோர் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இரண்டாவது முனையத்துக்கு சென்று அங்கிருந்து கோலாலம்பூர் முதன்மை நிலையத்துக்கு செல்ல வேண்டியிருந்தது.
இதனைக் கருத்தில் கொண்ட மலேசிய அரசு, பட்ஜெட் விமானங்கள் அனைத்தும் கோலாலம்பூர் முதன்மை முனையத்துக்கு சென்று வர அனுமதியளித்துள்ளது. இதற்கு அடிக்கடி மலேசியா சென்று வரும் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கோலாலம்பூர் விமான நிலையத்தின் வழியாக சென்று வருவதால் பணம், நேரம் ஆகியன சேமிக்கப்படுகிறது. சர்வதேச தரத்தில் அந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது. பல அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு பாலூட்ட தனி அறைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்ல பேட்டரி கார், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிவறைகள், விமான நிலையத்துக்குள்ளேயே ஏராளமான கடைகள் என அனைத்து வசதிகளும், அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல விரைவான போக்குவரத்து வசதிகளும் கோலாலம்பூர் பன்னாட்டு முனையத்தில் உள்ளன.
முக்கியமாக, விமானத்திலிருந்து வரும் பயணிகள் பாதுகாப்பாக விமான நிலையங்களுக்குள் செல்ல ஏரோபிரிட்ஜ் (விமானத்துக்கும் முனைய கட்டடத்துக்கும் இடையில் பாலம்) வசதி உள்ளது. மாற்று விமானங்களில் வேறு நாடுகளுக்குச் செல்வோர் விமான நிலையத்துக்குள்ளேயே காத்திருந்து வேறு விமானங்களில் செல்லலாம். மற்றொரு விமான நிலையத்திலிருந்து பல மணி நேரம் முன்னதாகச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்றனர்.