முகப்பு
தமிழ்நாடு

பழனி மலைக்கோயிலில் நாயக்கர் மண்டபத்தில் மாறுதல்கள் மேற்கொள்ள பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு

பழனி மலைக்கோயிலில் இலவச தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் நாயக்கர் மண்டபம், பாரவேல் மண்டபம், அர்த்தமண்டபம் வழியாக சென்று மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:19 AM
பகிர்:

பழனி மலைக்கோயிலில் கலைநயமிக்க கல்மண்டபங்கள் உள்ள நாயக்கர் மண்டபத்தில் மாற்றங்கள் மேற்கொள்ள திருக்கோயில் நிர்வாகத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பழனி மலைக்கோயிலில் இலவச தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் நாயக்கர் மண்டபம், பாரவேல் மண்டபம், அர்த்தமண்டபம் வழியாக சென்று மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.  இதில் இலவச தரிசன வரிசையில் உள்ள நாயக்கர் மண்டபம் நாயக்கர்கள் ஆட்சிபுரிந்த காலத்தில் கட்டப்பட்டதாகும்.  இங்குள்ள கல்தூண்கள், கல்மண்டபங்கள் அவற்றில் உள்ள சிற்பங்கள் கலைநயமிக்கவை ஆகும். இங்கு நக்கீரர், அருணகிரிநாதருக்கு தனி சன்னதிகள் உள்ளன.  கடந்த பல வருடங்களுக்கு முன்பு இங்கு மண்டபத்தின் சுவர் பகுதி சிறிய அறைகளாக தடுக்கப்பட்டு மலைக்கோயிலுக்கு புனிதநீர் கொண்டு வரும் ஸ்தானீக மிராஸ் பண்டாரங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இதில் அவர்கள் சிலைகளை நிர்மாணித்து வழிபட்டு வந்துள்ளனர். காலப்போக்கில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கவே ஸ்தானீக மிராஸ் பண்டாரங்களிடமிருந்த அப்பகுதியை திருக்கோயில் பெற்றுக்கொண்டு  சன்னதியை விட்டு வெளியே வரும் பகுதியில் தெற்குவெளிப்பிரகாரத்தில் அறை வழங்கப்பட்டது. இந்நிலையில் நாயக்கர் மண்டபத்தில் கடந்த இரு நாட்களாக பக்தர்களுக்கான க்யூ லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதற்காக மிராஸ் பண்டாரங்கள் இருந்த அறைகள் இடிக்கப்பட்டு வருகிறது. இச்செயலுக்கு ஸ்தானீக மிராஸ் பண்டாரங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் வியாழக்கிழமை எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.  வியாழக்கிழமை இப்பணி நடக்கும் பகுதிக்கு தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் தமிழ்மாறன், மாவட்ட துணை செயலாளர் இன்பா, நகர இளைஞரணி தலைவர் பாலன், தலைவர் கருப்பையா, பாரதிய ஜனதா கட்சி அழகுவேல், சிவசேனா நகர செயலாளர் முரளி உள்ளிட்டோர் சென்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் தமிழ்மாறன் தெரிவித்ததாவது, பழனிக்கோயிலில் தற்போது ஆன்மீகம் குறைந்து வியாபாரம் அதிகமாகி வருகிறது. மலைக்கோயிலில் யாரும் இரவு இருக்க கூடாது என்ற ஆகமவிதி மீறப்பட்டு இரவிலும் இயந்திரங்களைக் கொண்டு பணி நடக்கிறது.  ஆகவே, தஞ்சாவூரை போல பழனிக்கோயிலில் பூஜைகளை இந்து சமய அறநிலையத்துறையும், சிலைகள் பராமரிப்பை மத்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகமும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.  நகர இளைஞரணி தலைவர் பாலன் கூறுகையில், மேற்படி அறைகளில் பல ஆண்டு காலமாக ஸ்தானீக மிராஸ் பண்டாரங்கள் வழிபாடு செய்து வந்த தட்சிணாமூர்த்தி, சிவனின் திருமேனிகள், ஆகர்ஷண சொர்ண பைரவர், அம்பாள் சிலைகள் அகற்றப்பட்டுள்ளது. இவை பீடத்துடன் ஆகமவிதிப்படி இவை நிர்ணமாணிக்கப்பட்டது. பல அறைகள் நாயக்கர் காலத்திலேயே கட்டப்பட்ட கல்கட்டிடமாகும்.  இவற்றை இடிக்காமல், சிலைகளை அகற்றாமல் பக்தர்கள் வழிபட்டு செல்லும் வகையிலான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். 

இதுகுறித்து பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கத்திடம் கேட்டபோது, நாயக்கர் மண்டபத்தில் பக்தர்கள் வரிசையானது சுமார் 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ளது.  காலபூஜை நேரத்தின் போது பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் பணிகள் செய்யப்படவுள்ளது. இதற்காக ஆணையர் அனுமதி பெறப்பட்டுள்ளது.  நாயக்கர் மண்டபத்தில் காரைக்கட்டிடம் மட்டுமே இடிக்கப்படுகிறது.  உள்ளே இருக்கும் சிலைகள் ஆகம விதிப்படி வைக்கப்பட்டதா என்று தெரியவில்லை.  இதுகுறித்து, கோயில் குருக்கள் வசம் விசாரித்து சிலைகள் ஆகம விதிப்படி வைக்கப்பட்டிருந்தது என்றால் மீண்டும் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.