செம்மரக் கடத்தலுக்கு மறைமுக ஆதரவளிக்கும் அண்டை நாடுகள்?
செம்மரக் கட்டை ஏற்றுமதி, இறக்குமதிக்கு சர்வதேசத் தடை உள்ள நிலையில், இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக இவை கடத்தப்படுவதற்கு சீனா, மலேசியா, ஜப்பான், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகள் மறைமுக ஆதரவளிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடுசெம்மரக் கடத்தலுக்கு மறைமுக ஆதரவளிக்கும் அண்டை நாடுகள்?
செம்மரக் கட்டை ஏற்றுமதி, இறக்குமதிக்கு சர்வதேசத் தடை உள்ள நிலையில், இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக இவை கடத்தப்படுவதற்கு சீனா, மலேசியா, ஜப்பான், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகள் மறைமுக ஆதரவளிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
செம்மரக் கட்டை ஏற்றுமதி, இறக்குமதிக்கு சர்வதேசத் தடை உள்ள நிலையில், இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக இவை கடத்தப்படுவதற்கு சீனா, மலேசியா, ஜப்பான், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகள் மறைமுக ஆதரவளிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பின்னணி என்ன?: செம்மரக் கட்டைகளைக் கொண்டு விலை உயர்ந்த பாரம்பரிய இசைக் கருவிகள், மருந்துப் பொருள்கள், வண்ணக் கலவைகள், வாசனைத் திரவியங்கள், அழகுசாதன கலைப் பொருள்கள், பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. அணு உலைகளில் கதிர்வீச்சைத் தடுப்பதற்கு செம்மரக் கட்டைகள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் எதற்காக செம்மரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன, ஏன் இவ்வளவு விலை கொடுத்து இதை வாங்குகிறார்கள் என்ற கேள்விகளுக்கு இதுவரை யாரிடமிருந்தும் தெளிவான பதில் இல்லை.
பூமியில் உள்ள கோடிக் கணக்கான தாவர, விலங்கினங்களில் சுமார் 35 ஆயிரம் இனங்கள் மனிதப் பயன்பாடுகள், சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து அழிந்து வருவதாக அறியப்பட்டது. இந்த நிலை தொடருமானால் அடுத்த தலைமுறையில் இவ்வினங்கள் முழுமையாக அழிந்து விடும் அபாயம் ஏற்படும்.
இதனைக் கருத்தில் கொண்டு, அரிய வகை உயிரினங்களைக் காப்பதற்கான சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் மார்ச் 3, 1973-இல் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இதில் இந்தியா உள்ளிட்ட 180 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள ஒரு தாவர இனம்தான் செம்மரம். செம்மரத்தை எந்த வகையிலும் வர்த்தகம் செய்வதை மேற்கூறப்பட்ட ஒப்பந்தம் தடை செய்கிறது.
உலகிலேயே தரமான செம்மரம் தென்னிந்திய மலை சார்ந்த பகுதிகளில் மட்டுமே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உள்நாட்டில் எவ்விதப் பயன்பாடும் அறியப்படாததால், இந்தியாவில் செம்மரத்திற்கு பெரிய அளவில் தேவை இல்லை.
ஆனால் சீனா, மலேசியா, ஜப்பான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இதன் தேவை அதிகமாக இருக்கிறது. சர்வதேச ஒப்பந்தத் தடை உள்ளதால், இம்மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள், பயன்பாடுகள் குறித்து வெளிப்படையான விளக்கங்களை எந்த நாடும் தெரிவிப்பதில்லை.
நூதன முறையில் கடத்தல்: எந்தப் பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றாலும் முதலில் ஏற்றுமதி- இறக்குமதி குறியீட்டு எண்ணை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் பெற வேண்டும். கடத்தல்காரர்கள் ஏதேனும் ஊர் பெயர் தெரியாதவரின் பெயரில் வங்கிக் கணக்கு ஆரம்பித்து, குறியீட்டு எண் பெற்றுவிடுகின்றனர். பின்னர் சரக்குப் பெட்டகங்களில் மறைத்து வைக்க வசதியாக இருக்கும் அரிசி மூட்டைகள், கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்வதாக சுங்கத்துறையில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பார்கள். பிறகு அதிகாரிகளின் நேரடி ஆய்வுக்குப் பிறகு அரிசி மூட்டைகளோ, கிரானைட் கல்லோ சரக்குப் பெட்டகங்களில் ஏற்றி "சீல்' வைக்கப்படும்.
பின்னர் வழியில் சரக்குப் பெட்டகங்களை லாவகமாகக் கையாண்டு அரிசி மூட்டைகளை எடுத்துவிட்டு கூடுமானவரை செம்மரக் கட்டைகளை ஏற்றி விடுகின்றனர். ஆவணங்களின்படி வெளிநாட்டிற்குச் செல்லும்வரை சரக்குப் பெட்டகங்களில் உள்ளது அரிசியாகவே இருக்கும். இதில் அரிசிக்கான பணம் மட்டும் வங்கி மூலம் பரிமாற்றம் செய்யப்படும்.
சிறையில் இருப்பவர்களை விசாரித்தால்...: இந்தக் கடத்தலைக் தடுக்க மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு, சுங்கத் துறையின் சிறப்புப் பிரிவுகள் ஆகியன பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அவற்றையெல்லாம் முறியடிக்கும் வகையில் கடத்தல்காரர்கள் புதிய உத்திகளைக் கையாள்வதால் செம்மரக் கடத்தலை முழுமையாகத் தடுக்க முடிவதில்லை. மேலும் பிடிபடும் செம்மரங்கள் குறித்த தொடராய்வில் ஏற்றுமதியாளரின் முகவரி தேடிச் சென்றால், யாரேனும் ஓர் அப்பாவி அந்தப் பெயரில் இருப்பார். அவருக்கும் ஏற்றுமதிக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்காது.
மரம் வெட்டப்படுவது முதல் ஏற்றுமதியாளர் வரை தனித்தனியாக அப்பாவிகள் கையாளப்படுகின்றனர் என்பதே இந்தக் கடத்தலின் சிறப்பு. ஆந்திரச் சிறைகளில் சுமார் 1,200 அப்பாவிகள் இவ்வாறுதான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சிறையில் உள்ளோர்களிடம் விசாரித்தால் இந்த உண்மை தெளிவாகத் தெரியும். சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட மரங்களை வைத்திருந்ததாலும், வெட்டியதாலும் அவர்கள் குற்றவாளிகள். மற்றபடி அவர்கள் முழுமையாக பயன் அடைவதில்லை.
கடத்தலைத் தூண்டும் நாடுகள்: இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது, செம்மரக் கடத்தலை முற்றிலும் தடுக்க, ஏற்றுமதியாளர்- இறக்குமதியாளர் என இரு தரப்பையும் கண்காணித்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏற்றுமதியின்போது பிடிபடும் செம்மரக் கட்டைகள் 10 சதவீதம் கூட இருக்காது என்று கூறப்படுகிறது. மீதம் உள்ள 90 சதவீதம் செம்மரக் கட்டைகள் வெளிநாடுகளில் இறக்குமதியாகி விடுகின்றன.
குறிப்பாக சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் செல்லும் சரக்குகள் பெரும்பாலானவை மலேசியா சென்று அங்கிருந்து வேறு சரக்குப் பெட்டகங்களில் மாற்றப்பட்டு பிற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதுவரை சீனாவிலோ, ஜப்பானிலோ, இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட செம்மரங்கள் பிடிபட்டதாக ஒரு செய்தி கூட இல்லை.
செம்மரங்களின் சட்ட விரோதக் கடத்தலுக்கு இந்த நாடுகள் மறைமுக ஆதரவை தொடர்ந்து அளித்து வருகின்றன. அரசாங்க ஆதரவின்றி நிச்சயம் செம்மரக் கட்டைகள் இந்த நாடுகளுக்குள் ஊடுருவ முடியாது.
செம்மரக் கட்டைகள் குறித்து வெளியில் தெரியும் பயன்பாடுகள் தவிர்த்து, வேறு ஏதோ முக்கிய காரணத்திற்காக இந்த மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இது குறித்து சர்வதேச போலீஸ் மூலம் இதை விசாரிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதிரடி நடவடிக்கை
செம்மரக் கடத்தலைத் தடுக்க மத்திய வருவாய் புலனாய்வுத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த துறையின் இயக்குநர் நஜீப் ஷா கடந்த 23.1.2015 அன்று சுங்கத் துறை ஆணையர்களுக்கு ரகசிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
செம்மரக் கடத்தலைத் தடுக்க "அதிரடி நடவடிக்கை சேஷா' எனப் பெயரிடப்பட்டு, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையுடன் சுங்கத் துறை இணைந்து செயல்படுத்த வேண்டிய சிறப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் இருந்துவரும் இந்த அதிரடி நடவடிக்கையில், செம்மரங்கள் கடத்தப்படும்போது அவற்றைக் கைப்பற்றுவது மட்டுமே நோக்கமாக இல்லாமல், கடத்தலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டாகச் செயல்படுபவர்கள், அவர்களின் பணப் பரிமாற்றம் குறித்தும் புலனாய்வு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்தால் அனைத்து உயரதிகாரிகளுக்கும் தகவல்கள் விரைவாக தெரிவிக்கப்படும் வகையில் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.