கற்றுக் கொடுத்த ஆசிரியை வீட்டிலே கொள்ளையடித்துவிட்டு ஆசீர்வாதம் பெற்றுச் சென்ற மூவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனக்கு பிளஸ் 2 வகுப்பில் ஆங்கிலம் கற்றுத் தந்த ஆசிரியை வீட்டில் நள்ளிரவில் வீட்டினுள் புகுந்து கத்தி முனையில் 2 மணி நேரத்திற்கு மேல் வீட்டினுள் இருந்து நகை, பணம் கொள்ளையடித்துவிட்டு, அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி காவலில் வைத்தனர்.
தமிழ்நாடுகற்றுக் கொடுத்த ஆசிரியை வீட்டிலே கொள்ளையடித்துவிட்டு ஆசீர்வாதம் பெற்றுச் சென்ற மூவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனக்கு பிளஸ் 2 வகுப்பில் ஆங்கிலம் கற்றுத் தந்த ஆசிரியை வீட்டில் நள்ளிரவில் வீட்டினுள் புகுந்து கத்தி முனையில் 2 மணி நேரத்திற்கு மேல் வீட்டினுள் இருந்து நகை, பணம் கொள்ளையடித்துவிட்டு, அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி காவலில் வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனக்கு பிளஸ் 2 வகுப்பில் ஆங்கிலம் கற்றுத் தந்த ஆசிரியை வீட்டில் நள்ளிரவில் வீட்டினுள் புகுந்து கத்தி முனையில் 2 மணி நேரத்திற்கு மேல் வீட்டினுள் இருந்து நகை, பணம் கொள்ளையடித்துவிட்டு, அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி காவலில் வைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலையை ஒட்டியுள்ள கோட்டைத்தலைவாசல் தெருவில் குடியிருந்து வருபவர் மாரிக்கனி (60). இவர் ஓய்வு பெற்ற அரசு தணிக்கையாளர். இவரது மனைவி அமுதா. இவர் கிருஷ்ணப்பேரி காமாக் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
இருவர் மட்டுமே வீட்டில் உள்ளார்கள். 5-ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் வெளியே சென்றுவிட்டு, இருவரும் வீட்டினுள் செல்ல கதவை திறந்துள்ளார்கள். அமுதா திறந்து உள்ளே சென்று, சமையல் அறையில் இருந்துள்ளார். மாரிக்கனி பின்னால் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே செல்ல முயன்றபோது, வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டி ஒளிந்திருந்த 3 கொள்ளையர்கள் மாரிக்கனியுடன் சேர்ந்து வீட்டினுள் சென்றுள்ளார்கள். கொள்ளையர்கள் கதவைப் பூட்டிவிட்டு, மாரிக்கனியை நாற்காலியில் அமர வைத்து கை, கால்களை கட்டி வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டி வைத்துள்ளார்கள். இது சமையல் அறையில் இருந்த அமுதாவிற்கு தெரியவில்லை.
பின்னர் அமுதாவிடம் சென்ற கொள்ளையர்கள் கத்தி முனையில் அவர் அணிந்திருந்த செயின், தோடு, பீரோவில் இருந்த நகைகள் என 51 பவுன் நகைகளை எடுத்துள்ளனர். மேலும் ரொக்கப் பணம் ரூ.1.40 லட்சத்தையும் எடுத்துள்ளனர்.
பின்னர் ஏ.டி.எம். கார்டை கொள்ளையர்கள் கேட்டுள்ளார்கள். அதனை அமுதா கொடுத்துள்ளார். வீட்டில் மாரிக்கனியை இரு கொள்ளையர்கள் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள். மாரிக்கனியின் இரு சக்கர வாகனத்தில் ஒரு கொள்ளையன், அவரது ஹெல்மட்டை அணிந்து கொண்டு அமுதாவை ஏற்றிக் கொண்டு மாரியம்மன்கோவில் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்றுள்ளார். ஏ.டி.எம். மையத்திற்குள் வந்தால் முகம் தெரிந்துவிடும் என்று கூறி, வர மறுத்து வெளியே நின்று கொண்ட கொள்ளையன், அமுதாவை பணம் எடுத்து வரச் சொல்லியுள்ளார். அவர் அதிலிருந்து ரூ.40 ஆயிரத்தை எடுத்து கொள்ளையன் கையில் கொடுத்துள்ளார். மீண்டும் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார்கள். அவர்கள் செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் எடுத்துக் கொண்டு, இருவர் காலிலும் விழுந்து மூன்று கொள்ளையர்களும் எங்கள் ஆசீர்வதியுங்கள் என்று கூறி ஆசீர்வாதம் பெற்றுவிட்டு தப்பி ஓடி விட்டார்கள்.
இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையில் தனிப் படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் சிவகாசி தாலுகா, கள்ளிப்பட்டியில் குறிப்பிட்ட நபர்கள் திடீரென ஆடம்பரமாக வாழ்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் பரமேஸ்வரன் (23), தங்கராஜ் மகன் ராஜ்குமார் (26), முருகன் மகன் சரவணக்குமார் (15) ஆகிய மூவரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகைகள், செல்போன்கள், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை மீட்டனர்.
பரமேஸ்வரன், பிளஸ் 2 வரை கிருஷ்ணப்பேரி காமாக் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக அமுதா இருந்தபோது, அவரிடம் படித்தவர். அவர் பள்ளிக்கு அதிக நகைகள் அணிந்து வருவதை அறிந்து அவரிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்ததாக கூறியுள்ளார். இவர் சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் முடித்துள்ளார். ராஜ்குமார், சிவகாசியில் பிராந்தி கடையில் வேலை செய்து வருகிறார். சரவணக்குமார் கிருஷ்ணப்பேரியில் உள்ள ஆர்.சி. வீரமாமுனிவர் உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
போலீஸார் இச் சம்பவம் குறித்துக் கூறுகையில்: தலைமை ஆசிரியை அமுதாவை, வண்டியில் கொள்ளையன் அழைத்துச் செல்லும் போது அவர்களது வீட்டின் எதிரேயுள்ள கடை திறந்திருந்துள்ளது. இதனைப் பார்த்த கடைக்காரர் மருமகன் வந்து எங்கோ கூட்டிச் செல்வதாக நினைத்துள்ளார். அமுதா என்னைக் கடத்திச் செல்கிறான் என்று கூறியிருந்தால் கூட கொள்ளையர்களை உடனே பிடித்திருக்கலாம். சற்று நேரம் சென்றதும் மோட்டார் சைக்கிள் தானாக நின்றுள்ளது.
அப்போதும் அமுதா சத்தம் போடாமல் 5 நிமிடம் வரை வண்டியில் உட்கார்ந்து இருந்துள்ளார். ஏடிஎம் மையத்திற்கு சற்றுமுன்பு இரவு ரோந்துப் பணி போலீஸார் இருவர் சென்றுள்ளார்கள் அவர்களிடம் என்னைக் கடத்திச் செல்கிறான் என்று கூறியிருக்கலாம். அவர் எதுவுமே செய்யாமல் அமைதலாக இருந்துள்ளார் என்றனர். கைது செய்யப்பட்ட மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண் 2, பசும்பொன் சண்முகையா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை 15 நாள் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.