விழுப்புரத்தில் வன்முறை: வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்
விழுப்புரம் சேஷ சமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் சேஷ சமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வைகோ: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சேஷ சமுத்திரம் கிராமத்தில் ஒரு தெருவின் வழியே கோயில் தேரைக் கொண்டு செல்வது தொடர்பாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதோடு, மிகுந்த கவலை தருகிறது.
அமைதியை நிலைநாட்ட முயன்ற காவல்துறை கண்காணிப்பாளர் உள்பட சிலரும் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.தற்போது, அந்தப் பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவுகிறது. வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபடாத அப்பாவி பொதுமக்களுக்கு காவல்துறையினர் எந்த இடையூறும் செய்துவிடக் கூடாது. இதுபோன்ற வன்முறையால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலனும் மிகவும் பாதிக்கப்படும் என்பதால், வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் நல்லிணக்கமாக இரு தரப்பினரும் வாழ்ந்திட வேண்டும்.
ஜி.ராமகிருஷ்ணன்: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திலுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் தேரோட்டத்தையொட்டி நடைபெற்ற வன்முறை சம்பவத்தை மார்க்சிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது. சேஷசமுத்திரம் பகுதியில் தற்போதுள்ள பதட்டமான நிலைமையை தணிக்கவும், அங்குள்ள தலித் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்திடவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.