பாபநாசம், முண்டன்துறையில் சிறுத்தைகள் நடமாட்டம்!
பாபநாசம், முண்டன்துறை வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பாபநாசம், முண்டன்துறை வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் கடையத்திலிருந்து திருக்குறுங்குடி வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. புலிகள், சிறுத்தை, யானை, மான், மிளா போன்ற அரிய வகை விலங்கினங்களும், அரிய வகை தாவர வகைகளும் இக்காப்பகத்தில் உள்ளன. பல்லுயிர் பெருக்கத்திற்கு பெயர்பெற்ற புலிகள் காப்பகத்தின் மலையடி வாரங்களில் சிறுத்தை, மான், மிளா போன்ற விலங்குகள் மிக சாதாரணமாக நடமாடுவதுண்டு. மலையடி வாரக்கிராமங்களில் இரை தேட வரும் சிறுத்தைகள் ஆடு, நாய் போன்ற கால்நடைகளை அடித்து தின்பதுண்டு.
கடந்த சில தினங்களாக பாபநாசம், முண்டன்துறை வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர். காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் பாபநாசம் கீழ் அணை கடுவா ஓடை என்ற இடத்தில் சிறுத்தை ஒன்று நடமாட்டம் இருப்பதாக சுற்றுலாப் பயணி ஒருவர் தெரிவித்தார்.
குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சில தினங்களுக்கு முன் ஆழ்வார்குறிச்சி அருகே நடமாடிய சிறுத்தையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அங்கிருந்து சிறுத்தை அனவன்குடியிருப்பு வழியாக பாபநாசம் கீழ் அணை பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.