சர்வ கட்சி கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
முதல்வர் ஜெயலலிதா சர்வகட்சி கூட்டத்தை கூட்டி, சர்வகட்சி குழுவினருடன் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி ரூ.25 ஆயிரம் கோடி வழங்க வலியுறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா சர்வகட்சி கூட்டத்தை கூட்டி, சர்வகட்சி குழுவினருடன் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி ரூ.25 ஆயிரம் கோடி வழங்க வலியுறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: மழை, வெள்ளத்தால் சென்னை, கடலூர் பகுதிகளில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசு நிவாரண உதவிகள் பல கிராமங்களுக்கு சென்றடையவில்லை. சில இடங்களில் கணக்கெடுப்புக்கூட செய்யப்படவில்லை. இது வேதனையளிக்கிறது. கடலூர் மாவட்ட சாவு எண்ணிக்கை 106-க்கு மேல் உள்ளது. 4 ஆயிரம் கால்நடைகள் இறந்துள்ளன. 1 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்களும், 1 லட்சம் ஏக்கரில் கரும்பு உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளனர். மிகப்பெரிய சேதத்திற்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமே காரணமாகும். சுரங்கை நீரை வெளியேற்றியதால் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது. ஆண்டுக்கு 1700 ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் என்எல்சி நிறுவனம் வெறும் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் அனைத்து வீடுகளுக்கும் என்எல்சி அதற்கு பிராயசித்தமாக நிவாரணம் தர வேண்டும். கடலூர் மாவட்டத்தை அரசு பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகள் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நிரந்தர வீடுகள் கட்டித்தர வேண்டும், அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். அரசு அறிவித்த நிவாரணங்கள் போதாது. நெல் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், கரும்பு உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்துபோன மாடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும், ஆடுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும்.
கடலூர் மாவட்ட நீர்நிலைகள் குறிப்பாக வீராணம்ஏரியை தூர் வார வேண்டும். போதிய நீரின்றி விவசாயிகள் சம்பா மற்றும் குறுவை சாகுபடியை இழந்து வருகின்றனர். வீராணம்ஏரியை ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தி அதிகளவு நீரை சேமித்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப வேண்டும், விவசாயத்திற்கு நீர் வழங்க வேண்டும். மேலும் வெலிங்கடன் ஏரி, பெருமாள் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளையும் அரசு தூர்வார வேண்டும். பிரதமர் மோடி தமிழகத்திற்கு 1940 கோடி அளித்துள்ளார். இது போதாது. ரூ.25 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். எனவே முதல்வர் ஜெயலலிதா சர்வகட்சி கூட்டத்தை கூட்டி, ஒரு குழுவை அமைத்து பிரதமர் மோடியை சந்தித்து கூடுதலாக நிவாரணத்தொகை வழங்க வலியுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ளம் பாதித்த சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 வாரங்களுக்கு அரசு மதுபானக்கடைகளை மூட வேண்டும்.
Advertisement
கடலூர் மாவட்டத்திற்கு வரும் நிவாரணப் பொருள்களை ஆளும் கட்சியினர் வழிமறித்து பறித்து செல்லவாதக கூறப்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் துணை போகின்றனர். எனவே அனைத்துகட்சியினர், தொண்டு நிறுவனங்கள், ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் கொண்ட குழுவை அமைத்து நிவாரணப் பொருள்களை வழங்க வேண்டும். அப்போதுதான முறையாக சென்றடையும்.
தமிழகத்தின் வெள்ள பாதிப்பு குறித்தும், கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதும் குறித்தும் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் பேசுவார். பிரதமரை சந்தித்து வலியுறுத்துவார் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார். பேட்டியின் போது பாமக மாநிலத் தலைவர் கோ.க.மணி, மாநில சொத்து பாதுகாப்புக்குழுத் தலைவர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமி, தேர்தல் பணிக்குழுத் தலைவர் பு.தா.அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் கு.திருஞானம், மாநில துணைத் தலைவர்கள் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், வேணு.புவனேஸ்வரன், கடலூர் மாவட்டத் தலைவர் செல்வ.மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.