ஆந்திரத்தில் உடனுக்குடன்! தமிழகத்திலோ காத்திருப்பு!!
தமிழகத்தில் ஆதார் அட்டை பெற ஆண்டுக்கணக்கில் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்; வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும்,
தமிழ்நாடுஆந்திரத்தில் உடனுக்குடன்! தமிழகத்திலோ காத்திருப்பு!!
தமிழகத்தில் ஆதார் அட்டை பெற ஆண்டுக்கணக்கில் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்; வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும்,
தமிழகத்தில் ஆதார் அட்டை பெற ஆண்டுக்கணக்கில் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்; வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும், இணையதள மையங்களுக்கும் நடையாய் நடக்கின்றனர். இது இப்படியிருக்க, ஆந்திர மாநிலத்தில் உள்ள தடா பகுதியில் உள்ள ஆதார் அட்டை சிறப்பு மையத்தில் உடனுக்குடன் ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதனால், தமிழகப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அங்கு சென்று அட்டைகளைப் பெற்றுவருகின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்ட உதவிகள், மானியங்கள், சலுகைகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விண்ணப்பித்து சில ஆண்டுக்கு மேல் ஆகியும் ஆயிரக்கணக்கானோருக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை. மேலும், குடும்பத்தில் பலருக்கு கிடைத்தும் ஓரிருவருக்கு கிடைக்காத நிலை உள்ளது. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யச் சென்றால், "உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவிட்டது' என்ற பதிலே கிடைக்கிறது. "ஒன்று சேர புகைப்படம் எடுத்தோம். இப்போது ஒருவருக்கு வரவில்லையே?' என்று ஆதார் அட்டை சிறப்பு மைய ஊழியர்களிடம் கேட்டால், மீண்டும் எடுத்துகொள்ளுங்கள் என்ற பதில்தான் வருகிறது.
தமிழகத்தில் காத்திருப்பு!
ஆதார் அட்டைக்காக வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள சிறப்பு மையங்களில் நாள்தோறும் புகைப்படம் எடுத்துகொள்ள நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சில மணி நேரம் காத்திருந்து புகைப்படம் எடுக்கச் செல்லும்போது, "இன்று நிறைய பேருக்கு எடுத்துவிட்டோம். நாளை வாருங்கள்' என்று வரிசை சீட்டு எண் அளித்து திருப்பி அனுப்புகின்றனர். இதனால், நடையாய் நடந்தும் ஆதார் அடையாள அட்டைக்கு தவம் இருப்பவர்கள் பல்லாயிரக்கணக்கானோர்!
ஆந்திரத்தில் உடனுக்குடன் அட்டை!
இந்த நிலையில், தமிழக எல்லையையொட்டி, ஆந்திர மாநிலம் தடா பகுதியில் ஆதார் அட்டையை பெற சிறப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு விண்ணப்பித்த அன்றே ஆதார் அட்டைக்கான விவரங்கள் பதியப்பட்டு, ஆதார் அட்டை ஒன்றிரண்டு மணி நேரங்களில் கிடைத்து விடுகிறது.
இதனால், தமிழக எல்லையை ஒட்டியுள்ள கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள நொச்சிக்குப்பம், ஆரம்பாக்கம், பாட்டைக்குப்பம், தோக்கமூர், பூவலை, நாயுடுகுப்பம், எகுமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோரும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலானோரும் தடாவுக்குச் சென்று ஆதார் அட்டையைப் பெற்று உடனுக்குடன் திரும்பி விடுகின்றனர். இதற்காக நபர் ஒருவர் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் வசித்து வந்தும் இவர்களுக்கு ஆதார் அட்டை தெலுங்கு மொழியில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழக முகவரியும் இதில் பதிவு செய்யப்படுகிறது. ஆங்கிலத்திலும் விவரங்கள் இருப்பதால், பிரச்னைகள் எதும் ஏற்பட வாய்ப்பில்லை.
தமிழகத்திலும்
விரைவு மையம் அமையுமா?
இதுகுறித்து ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த கண்ணன் கூறுகையில்,
கடந்த 2ஆண்டுகளுக்கு முன்னரே ஆதார் அட்டைக்காக விண்ணப்பித்த நிலையில் 30 சதவீதத்தினருக்கே ஆதார் அட்டை கிடைத்துள்ளது. அரசின் உதவிகளைப் பெற இனி ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலையில் கும்மிடிப்பூண்டியில் ஆதார் அட்டை பெற தனி அலுவலகம் இல்லாத காரணத்தால் ஆதார் அட்டை பெற தாமதமாகிறது. எனவே, ஆந்திரத்தில் எளிய முறையில் ஆதார் அட்டையை பெற முடியும் என்பதால், அனைவரும் அங்கு சென்று ஆதார் அட்டையை பெற்று விடுகின்றனர் என்றார். எனவே, தமிழகத்திலும் உடனுக்குடன் ஆதார் அட்டை பெறும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இரண்டு வேண்டவே வேண்டாம்
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ஆதார் அடையாள அட்டை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பாஜக ஆட்சிக்கு வந்தும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
எரிவாயு மானியம், முதியோர் ஓய்வூதியம் பெறுதல், வாக்காளர்ப் பட்டியல், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், இ.எஸ்.ஐ. உள்ளிட்ட பல அரசின் திட்டங்களுக்கும் ஆதார் எண் கேட்கப்பட்டு வருகிறது.
இதனால், இப்போது ஆதார் அட்டை பெற அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த அடையாள அட்டையை தாங்கள் வசிக்கும் இடத்தில்தான் பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை. நாட்டில் உள்ள எந்தவொரு சிறப்பு மையத்திலும் அடையாளச் சான்றிதழ், சுய விவரங்களை அளித்து புகைப்படம் எடுத்துகொள்ளலாம்.
இந்த விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், இணையதளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ஒருமுறை அட்டை பெற்றாலே போதும். முகவரி, பெயர் உள்ளிட்டவற்றை இணையதளத்திலேயே "அப்டேட்' செய்துகொள்ளலாம்.
வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டையைப் போல இரு இடங்களில் ஆதார் அட்டையைப் பெறுவது சட்டப்படி தவறு என்று ஆதார் சிறப்பு மைய ஊழியர்கள் தெரிவித்தனர்.