பாபநாசம், கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், கொடுமுடியாறு, கடனாநதி, கருப்பாநதி அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், கொடுமுடியாறு, கடனாநதி, கருப்பாநதி அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): ராமநதி அணை 3, குண்டாறு அணை 3, நம்பியாறு அணை 23, கொடுமுடியாறு அணை 35, பேச்சிப்பாறை அணை 10, பெருஞ்சாணி அணை 8.4, மூலக்கரைப்பட்டி 10, திருநெல்வேலி 2, பாளையங்கோட்டை 3, சேரன்மகாதேவி 3, செங்கோட்டை 1.3, ஆய்க்குடி 3.2, ராதாபுரம் 44, நான்குனேரி 26. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி 16.6, திருச்செந்தூர் 29, ஓட்டப்பிடாரம் 5, கழுகுமலை 3, சாத்தான்குளம் 8.2, காயல்பட்டினம் 12.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1045 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 1.75 அடி உயர்ந்து 83.05 அடியாக இருந்தது. அணையிலிருந்து 104 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 97.96 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 64.70 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 305 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் பெருங்கால் பாசனத்திற்கு 30 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 72 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 71.50 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 1.60 அடி உயர்ந்து 69.23 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 103 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 24.50 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.53 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 23.50 அடியாகவும் இருந்தது.