நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கனமழை: குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது
திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை பல்வேறு பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வானப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை பல்வேறு பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வானப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 3 மணி நேரம் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையில் பாளையங்கோட்டை சேவியார் காலனி, வண்ணார்பேட்டை பரணிநகர், சந்திப்பு பாலபாக்யாநகர், மேலப்பாளையம் காயிதேமில்லத்நகர், பாத்திமாநகர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
மழையின் காரணமாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை உருவானது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார், அரசு பள்ளிகளுக்கு ஆட்சியர் மு. கருணாகரன் விடுமுறை அளிக்க உத்தரவிட்டார். கல்லூரிகளில் பல்கலைக் கழகத் தேர்வுகள் நடைபெற்று வருவதால் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கியது.
புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாளையங்கோட்டை 60, திருநெல்வேலி 36, சேரன்மகாதேவி 40, களக்காடு 25.2, நான்குனேரி 59, ராதாபுரம் 24, அம்பாசமுத்திரம் 23.2, ஆலங்குளம் 48.4, கன்னடியன் அணைக்கட்டு 23, மூலக்கரைப்பட்டி 12.4, தென்காசி 2, செங்கோட்டை 6, ஆய்க்குடி 15.2, பாபநாசம் அணை 3, பாபநாசம் கீழ் அணை 4, சேர்வலாறு அணை 1, மணிமுத்தாறு அணை 18.2, ராமநதி அணை 3, கருப்பாநதி அணை 7, குண்டாறு அணை 11, நம்பியாறு அணை 43, கொடுமுடியாறு அணை 35. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 30.6, ஓட்டப்பிடாரம் 8, மணியாச்சி 21, கயத்தாறு 7, கடம்பூர் 12, கழுகுமலை 8, சாத்தான்குளம் 28.6, திருச்செந்தூர் 7, காயல்பட்டினம் 14, ஸ்ரீவைகுண்டம் 31, விளாத்திகுளம் 2, கீழஅரசடி 1.5. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 800 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 152 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 63.07 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 56 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 25.22 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1.20 அடி உயர்ந்து 84.25 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 98.72 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 64.90 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 72.50 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 71.50 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 70.21 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 103 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 24.50 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.80 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 25 அடியாகவும் இருந்தது.
வீடுகள் இடிந்து சேதம்: பலத்த மழையால் இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் 25 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெருமாள்புரத்தில் 2 பழமையான மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை குறைந்து வெப்பம் இருந்ததால் தாழ்வானப் பகுதியில் தேங்கிய மழை நீர் வடியத் தொடங்கியது.