பிசான சாகுபடிக்கு பாபநாசம் அணைத் திறப்பு: 86,107 ஏக்கர் பயன்பெறும்
பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதன்படி இன்று காலை 8 மணிக்கு பாபநாசம் அணையிலிருந்து மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார். இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி கால்வாய், பாளையம்கால்வாய், கோடகன் கால்வாய், கன்னடியன் கால்வாய், வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால்வாய், மருதூர் கீழக்கால்வாய், ஸ்ரீவைகுண்டம் தெற்கு மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் ஆகிய 11 கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
முதல் கட்டமாக அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தேவையை பொறுத்து பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும். 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை 146 தினங்களுக்கு பிசான சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வி. விஷ்ணு, தாமிரவருணி வடி நில கோட்ட செயற்பொறியாளர் ஏ. சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.