அனைவருக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் போராட்டம்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கணக்கெடுத்து முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கணக்கெடுத்து முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அனைத்து பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி முடித்த பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும், பெயரளவிற்கு கொடுப்படும் நிவாரணத்தை நிறுத்த வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான மக்கள் நலக்கூட்டு இயக்கத்தினர் திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலரும், சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி அலுவலருமான சுப்பிரமணியன், சிதம்பரம் கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி ஆகியோரை நேரில் சென்று வலியுறுத்தினர்.
பின்னர் அரசு அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.